வங்கதேசத்தில் 2024 ஆகஸ்ட் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், நாடு முழுவதும் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது பல்வேறு தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகள் பதிவாகியிருப்பது கவலையளித்து வருகிறது. 4 நாட்களுக்கு முன்பு அந்நாட்டின் ரங்க்பூரில் இந்து குடும்பம் ஒன்று கொலை செய்யப்பட்டு முகங்களை ரசாயனம் கொண்டு சிதைக்கப்பட்டிருந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்துக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 21-ந்தேதி நள்ளிரவு வங்கதேசத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ரங்க்பூர் நகரத்தின் ஓய்வுபெற்ற ஆசிரியர் கணபதி சக்ரவர்த்தி, என்பவரது வீட்டு மாடியில் வழக்கத்திற்கு மாறாக சத்தம் கேட்டுள்ளது. தூக்கத்திலிருந்த கணபதி சத்தம் கேட்டு விழித்து மாடிக்கு டார்ச் லைட்டுடன் தனக்கு நேரப்போகும் ஆபத்தை உணராமல் ஏறிச்சென்றுள்ளார்.
அங்கே இருவர் ‘யாபா’ என்ற வீரியமிக்க போதைப்பொருளை பயன்படுத்திக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து யாரடா நீங்க? இங்கே என்ன பண்றீங்க?" என்று ஆசிரியர் குரலை உயர்த்த, கண நேரத்தில் இருவரும் ஆசிரியரின் வாயைப் பொத்தி தாங்கள் வைத்திருந்த துணியால், கொடூரமாகக் கழுத்தை நெரித்து முதல் கொலையை அரங்கேற்றியுள்ளனர். மாடியில் சத்தம் கேட்பதை அறிந்து ஓடி வந்த கணபதி சக்ரவர்த்தியின் மனைவி பிரிதிலதாவும் துடிதுடிக்க போதை நபர்களால் கொலை செய்யப்படுகிறார்.
இரண்டு கொலைகளையும் செய்துவிட்டு வீட்டிற்குள் இறங்கிய இருவரும் அங்கே தூங்கி கொண்டிருந்த 23 வயது மகள் அகமியையும், 12 வயது மகன் பிரியமுத்தையும் துரத்தி துரத்தி வெட்டி சாய்க்கின்றனர். அடுத்தடுத்து நால்வரையும் கொன்று குவித்த இருவரும் நான்கு பேர் முகங்களிலும் ரசாயனத்தை ஊற்றி எரித்துள்ளனர். பின்னர், கொலையாளிகள் நிதானமாக வெள்ளிக்கிழமை காலை வரை வீட்டிற்குள்ளேயே தங்கியிருந்து அந்த வீட்டிலேயே குளித்து, வீட்டில் உள்ள சாப்பாட்டு மேசையில் இருந்த பேரீச்சம்பழங்களையும், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த உணவையும் சாப்பிட்டதாக விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இக்கொலை சம்பவத்தை மறைக்க பீரோக்களை உடைத்து, தங்க நகைகளைத் திருடி, வீட்டுப் பொருட்களை சிதறடித்து கொலைகளை தோல்வியடைந்த கொள்ளை முயற்சி போலக் காட்டிவிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலையில் வீட்டைப் பூட்டிவிட்டு கொலையாளிகள் சத்தமில்லாமல் தப்பியோடி உள்ளனர். இதனையடுத்து ரங்க்பூர் பெருநகர காவல்துறை மற்றும் துப்பறியும் பிரிவினர் நடத்திய தீவிர விசாரணையைத் தொடர்ந்து, இந்தக் கொலையில் தொடர்புடைய சித்தார்த்த தாஸ் மற்றும் முக்தா தாஸ் ஆகிய இருவரைத் தீவிர விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஆசிரியர் கணபதியின் அண்ணன் கோபிநாத் சக்கரவர்த்தி அளித்துள்ள புகாரில், இப்படுகொலையின் பின்னணியில் பெரிய அளவிலான குற்றக் கும்பல் அல்லது வேறு சதித்திட்டம் இருக்கக்கூடும் என்று சந்தேகம் தெரிவித்து, முழுமையான விசாரணை நடத்தக் கோரியுள்ளார். வங்காளதேசத்தின் இந்து சிறுபான்மையினர் சம்பந்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் குறித்த தொடர்ச்சியான கவலைகளுக்கு மத்தியில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இது மதரீதியான அல்லது திட்டமிட்ட இந்து விரோதக் கும்பலின் தாக்குதல் என்பதற்கான நேரடி ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும், போதைப்பொருள் தகராறு மற்றும் சாட்சிகளை ஒழிக்கும் நோக்கிலேயே இக்கொலைகள் நடந்துள்ளன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இதன் பின்னணியில் பெரிய கும்பல் இருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியுள்ளதால் விசாரணை தொடர்கிறது.
இதனைத்தொடர்ந்து ஆசிரியர் கணபதி சக்கரவர்த்தி பணியாற்றி ஓய்வுபெற்ற ரங்க்பூர் ஜில்லா பள்ளி முன்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரண்டு மனிதச் சங்கிலி மற்றும் மௌன ஊர்வலத்தை நடத்தினர். படுகொலைக்குக் காரணமானவர்களுக்கு அதிகபட்ச தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். வங்கதேசத்தில் 2024 ஆகஸ்ட் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், நாடு முழுவதும் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது பல்வேறு தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகள் பதிவாகி இதுவரை சுமார் 25 முதல் 40-க்கும் மேற்பட்ட இந்துக்கள் உயிரிழந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்டிருந்ததால், பெரும்பான்மையான இந்துக்கள் அக்கட்சியின் ஆதரவாளர்களாகப் பார்க்கப்பட்டனர். ஆட்சி வீழ்ந்தவுடன் உருவான அரசியல் கோபமும் பழிவாங்கும் வெறியும் கட்சித் தலைவர்களோடு சேர்த்து சிறுபான்மை மக்கள் மீதும் திரும்பியுள்ளது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.