புதுச்சேரி, எல்லைபிள்ளைசாவடி பகுதியைச் சேர்ந்தவர் திருவேங்கடம். இவருக்கு இரண்டு மனைவிகள், இருக்கும் நிலையில் முதல் மனைவிக்கு ரேகா என்ற மகளும், இரண்டாவது மனைவி சித்ராவிற்கு 23 வயதில் சூர்யா என்ற மகனும் இருக்கின்றனர். ரேகாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த 48 வயதான துரை என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. துரை திலாஸ்பேட்டை பகுதியில் ஜல்லி மற்றும் மணல் விற்பனை செய்யும் நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார். திருவேங்கடத்திற்கு வயதாகும் நிலையில் அவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கு சொத்துக்களை பிரித்து கொடுத்திருந்தார்.
இதில் புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள திருவேங்கடத்துக்கு சொந்தமான வீட்டில் முன்பகுதி முதல் மனைவியின் மகள் ரேகாவிற்கும், பின் பகுதி இரண்டாவது மனைவியின் மகன் சூர்யாவிற்கு கொடுத்துள்ளார். ஆனால் சித்ராவும் அவரது மகன் சூர்யாவும் தங்களுக்கு முன்பகுதி வீடு தான் வேண்டும் என வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும் வீட்டின் முன்பகுதியை கேட்டு சூர்யா நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் தீர்ப்பு ரேகாவிற்கே ஆதரவாக வந்துள்ளது, இதனால் சூர்யா ரேகாவின் மீதும் அவரது கணவர் துரையின் மீதும் கோபத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
தீர்ப்பு வந்ததை அடுத்து ரேகா மற்றும் அவரது கணவர் 100 அடி சாலையில் உள்ள வீட்டில், தங்களுக்கு சொந்தமான பகுதியில் பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்ட தொடங்கியுள்ளனர். இதனால் சூர்யாவிற்கும் ரேகாவுக்கும் இடையே கட்டுமான வேலைகள் குறித்து தினம் தோறும் வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சூர்யா துரையை கொலை செய்ய முடிவு செய்து தனது நண்பர்களை கூட்டு சேர்த்துள்ளார். திட்டத்தின் படி கடந்த (ஜூலை 22) ஆம் தேதி தனது விற்பனை நிலையத்தில் இருந்த துரையை, சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துரையின் உடலை காப்பாற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற சூர்யாவையும் அவரது நண்பர்களையும் தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார், பட்டனூர் பகுதியில் பகுதியில் பதுங்கியிருந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்களான நாகராஜ் (25), குயவர்பாளையம் கவுதம் (20), மணிமாறன்(22), டி.ஆர்.நகர் ஸ்ரீநாத் (24), லாஸ்பேட்டை அருள்பிரகாஷ்(25), கோவிந்தசாலை கிருஷ்ணகுமார் (21), கொம்பாக்கம் டேனியல் (22), திண்டிவனம் நரேஷ்குமார் (23) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சொத்துக்காக மச்சான் அக்கா கணவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.