க்ரைம்

“சுடுகாட்டில் நள்ளிரவில் நடந்த பூஜை” - அதிகாலையில் அகோரி வீட்டிற்கு சென்ற வாலிபர்… கத்தியால் குத்தி கொல்லப்பட்ட பின்னணி!

மண்டை ஓடு பாண்டி இரவில் சுடுகாடு பகுதியில் பூஜை செய்து வழிபாடு செய்து...

Mahalakshmi Somasundaram

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பேயன்பட்டி ஜீவா நகரை சேர்ந்தவர் லட்சுமணன் என்பவரது மகன் 26 வயதுடைய நந்தகுமார். இவர் கூலி வேலை செய்து வரும் நிலையில் கடந்த (பிப் 06) ஆம் தேதி காலை இருசக்கர வாகனத்தில் ஜீவா நகர் பகுதியில் சென்றபோது கழுத்தில் குத்தப்பட்டு படுகாயம் அடைந்து உயிரிழந்த நிலையில் கிடந்தார். நந்தகுமார் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குன்றக்குடி போலீசார் உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்த குன்றக்குடி போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் சிவகங்கை மாவட்ட எஸ் பி நேரில் வருகை தந்து விசாரணை செய்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். கடந்த 2018 ஆம் ஆண்டு முருகேசன் என்பவரை ஜெயராமன் மற்றும் சிலர் வெட்டி கொலை செய்தனர். இதற்கு பழி வாங்க முருகேசனின் நண்பர்களான நந்தகுமார் உட்பட சிலர் 2019ம் ஆண்டு ஜெயராமனை வெட்டி கொலை செய்தனர். இதனால் இரு தரப்பிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன் பகை நீடித்து வந்தது.

இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நந்தகுமார் சிறையில் இருந்த கடந்த மாதம் விடுதலையான நிலையில் பழிக்கு பழியாக கொலை நடந்துள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை செய்தனர். இந்நிலையில் வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் 65 வயதுடைய மண்டை ஓடு பாண்டி என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் மண்டை ஓடு பாண்டி இரவில் சுடுகாடு பகுதியில் பூஜை செய்து வழிபாடு செய்து வந்ததாகவும் கஞ்சா உபயோகித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பாண்டியிடம் கஞ்சா இருப்பதை அறிந்த நந்தகுமார் மண்டை ஓடு பாண்டி வீட்டுக்கு சென்று அகோரியிடம் கஞ்சா கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மண்டை ஓடு பாண்டி தான் இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து நந்தகுமார் கழுத்தில் ஆவேசமாக குத்தி உள்ளார். இதில் படுகாயத்துடன் அங்கு இருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற போது சிறிது தூரத்தில் சுயநினைவு இழந்து தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. அப்பகுதி மக்கள் தகவலின் படி விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் நந்தகுமார் இறந்துவிட்டது உறுதி செய்த பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. காரைக்குடி அருகே வாலிபர் கொலை வழக்கு திடீர் திருப்பமாக 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.