UP woman missing case 
க்ரைம்

“அவள் நாகினியாக மாறிவிட்டாள்" ஒரே இரவில் காணாமல் போன 20 வயது பெண்.. அறையில் கண்டெடுக்கப்பட்ட 5 அடி பாம்புத்தோல்

அந்த பெண் உறங்கிய அறையின் தரையில் ஒரு பாம்புப் தோல் கண்டுபிடிக்கப்பட்டது.

Vinvizhi Leninton

உத்தரப் பிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு இளம் பெண் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு துவக்கத்தில் சிங்கன்பூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான அந்தப் பெண், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது அறைக்கு உறங்கச் சென்றபோது, ​​அவர் ஒரு பாம்பாக மாறியதாக கிராமம் முழுவதும் பரவிய செய்தி ஒரு திரில்லர் படத்தில் கதையையே மிஞ்சியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து குடும்பத்தினர் கூற்றின் படி, அந்த இளம் பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல் தனது அறைக்கு தூங்குவதற்காக சென்றுள்ளார். மறுநாள் காலை அவரது தாய் அவரை எழுப்பச் சென்றபோது, ​​படுக்கை காலியாக இருந்துள்ளது. இருப்பினும், அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. அந்த பெண்ணின் ஆடைகளும் நகைகளும் படுக்கையில் கிடந்துள்ளது, அவற்றுக்குச் சற்று அருகில் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்புத் தோல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி கிராமம் முழுவதும் பரவியதும், அந்தப் பெண் ஒரு 'இச்சாதாரி நாகினி' (உருமாறும் புராணப் பாம்பு) என்ற வதந்தி கிராமம் முழுவதும் பரவியது. அந்த பெண் உறங்கிய அறையின் தரையில் ஒரு பாம்புப் தோல் கண்டுபிடிக்கப்பட்டது, இது உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளுக்கு மேலும் வலு சேர்த்தது என்றே கூறலாம். கடந்த காலங்களில் அந்த பகுதிகளில் அவ்வப்போது பாம்புகள் காணப்பட்டதாக அந்தக் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

"நாங்கள் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளோம், எங்கள் மகள் பத்திரமாகத் திரும்பி வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்," என்று செய்தியாளர்களிடம் கூறிய அக்குடும்பத்தினர், காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அந்த பெண்ணின் தந்தையின் புகாரைத் தொடர்ந்து, பாரதிய நியாய சம்ஹிதாவின் (பிஎன்எஸ்) பிரிவு 87-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் இதில் ஒளிந்துள்ள உண்மையை கண்டுபிடித்தனர். அதாவது அந்த பெண் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். அவரோடு ஊரைவிட்டு ஓடிச்செல்லவும் திட்டமிட்டுள்ளார். ஏனெனில் அந்த பெண்ணிற்கு வேறொருவருடன் திருமணமும் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்டது. அதனால், குடும்பத்தாரை திசை திருப்புவதற்காக தனது கனவில் அடிக்கடி பாம்பு வருவதாகவும், பாம்பினை பார்ப்பதாகவும் கூறிவந்துள்ளார். இது மொத்தமும் அந்த பெண்ணின் தாயின் தொலைபேசி மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் வீட்டை விட்டு ஓடிச்செல்வதற்கு முன்பு தனது தாயின் தொலைபேசியின் மூலம் அவரது காதலனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். காவல்துறை அந்த எண்ணைக் கண்டறிந்து, கண்காணிப்பில் வைத்ததுடன், அந்த நபரின் தொடர்பு விவரங்களையும் அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்