VIRUTHACHALAM MURDER. 
க்ரைம்

“மாமனாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன்” - தடுக்க வந்த மாமியாருக்கு நடந்த கொடூரம்… கிராமத்தையே உலுக்கிய அலறல் சத்தம்!

பயந்து ஓடிய கனிமொழி அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்து தப்பித்தார்...

Mahalakshmi Somasundaram

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 50 வயதுடைய செல்வமணி லதா தம்பதிகள். இவர்களுக்கு 31 வயதில் கனிமொழி என்ற மகள் உள்ள நிலையில் அவருக்கு கடந்த பதினோரு வருடங்களுக்கு முன்பு வடவாடி கிராமத்தை சார்ந்த 41 வயதுடைய காந்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது கனிமொழிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில் காந்தியும் கனிமொழியும் குடும்பத்துடன் பூதாம்பூர் பகுதியில் வசித்து வந்தனர்.

கூலித்தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த காந்தி நாளடைவில் குடிபோதைக்கு அடிமையாகி தினந்தோறும் குடித்துவிட்டு மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் காந்தியின் தொல்லையை தாங்க முடியாத கனிமொழி கோபித்துக் கொண்டு அவருடைய தந்தை செல்வமணி வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று தங்கி இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று மாலை குடித்துவிட்டு கனிமொழி வீட்டிற்கு சென்ற காந்தி மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கனிமொழியின் தந்தை செல்வமணி மருமகனை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த காந்தி திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமனாரின் செல்வமணியின் மார்பில் குத்திய நிலையில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சரிந்து விழுந்து மயங்கினார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து தடுக்க வந்த மாமியார் லதா என்பவரையும் காந்தி மார்பில் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றார். இதனால் பயந்து ஓடிய கனிமொழி அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்து தப்பித்தார். இதற்கிடையில் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் செல்வமணி, லதா ஆகிய இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். செல்வமணிக்கு அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் லதாவின் மார்பு பகுதியில் கத்தியால் குத்தியதால் அவர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து புகாரின் பேரில் விருத்தாசலம் காவல் ஆய்வாளர் பிரகஸ்பதி, உதவி ஆய்வாளர் பாரத நேரு ஆகியோர் விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து காந்தியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மருமகன், மாமனார் மற்றும் மாமியாரை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்