Rajeshwari Death Case Kanchipuram 
க்ரைம்

“திருமணமான ஒரு மாதத்தில் கணவன் செய்த டார்ச்சர்” - அறைக்குள் தூக்கில் தொங்கிய மனைவி.. இளம் பெண் உயிரிழந்தது எப்படி?

இருவரும் இணக்கமாக வாழ முயற்சி செய்யுமாறு அறிவுரை கூறியதாகக் கூறப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே திருமணமான நான்கு மாதங்களிலேயே இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மனரீதியான துன்புறுத்தல் தொடர்பான புகார்களின் பின்னணியில், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படப்பை அடுத்த அழகூர் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதுடைய தீபக். இவர் ஆந்திராவில் எல்.எல்.பி. படித்துள்ளார். இவருக்கும், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள எச்சூர் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ராஜேஸ்வரி என்பவருக்கும், இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எம்.பி.ஏ. பட்டதாரியான ராஜேஸ்வரி, திருமணத்திற்குப் பிறகு கணவருடன் வசித்து வந்தார்.

திருமணமான முதல் ஒரு மாதம் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, ராஜேஸ்வரியின் நடத்தையில் சந்தேகப்பட்ட தீபக், அவர் செல்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தியதுடன், செல்போனை வாங்கி வைத்துக்கொண்டு மனரீதியாகத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ராஜேஸ்வரி, தனது தாயாரிடம் பலமுறை கூறி அழுததாகத் தெரிகிறது. அப்போது அவரது தாயார், குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளைப் பொறுமையாகக் கையாண்டு, இருவரும் இணக்கமாக வாழ முயற்சி செய்யுமாறு அறிவுரை கூறியதாகக் கூறப்படுகிறது.

Rajeshwari Death Case Kanchipuram

இந்நிலையில், சம்பவத்தன்று கணவன் - மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் தீபக் வேலைக்குச் சென்றுள்ளார். இதற்கிடையே, படுக்கையறைக்குச் சென்ற ராஜேஸ்வரி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த தீபக்கின் தம்பி, அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ராஜேஸ்வரி மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை மீட்டு, படப்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ராஜேஸ்வரியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து சோமங்கலம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராஜேஸ்வரியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இளம் பெண் உயிரிழந்துள்ளதால், இந்தச் சம்பவம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) விசாரணை நடைபெற உள்ளது. ராஜேஸ்வரியின் உயிரிழப்புக்கான காரணம் மற்றும் திருமண வாழ்க்கையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பிரச்சினைகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். திருமணமான சில மாதங்களிலேயே இளம் பெண் உயிரிழந்த சம்பவம், இரு குடும்பத்தினரிடையேயும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.