க்ரைம்

சினிமா பட பாணியில் அடுத்தவர்களின் ஏடிஎம் கார்டுகளில் இருந்து பணம் கொள்ளை..!

பல்வேறு ஏடிஎம் மையங்களில் அடுத்தவர்களின் ஏடிஎம் கார்டுகளிலிருந்து நூதன முறையில் பணத்தை அபேஷ் செய்த இருவரை எடப்பாடி போலீசார் கைது செய்தனர்.

Suaif Arsath

சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம், சின்னமுத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் எடப்பாடி இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் கடந்த ஜூன் 8ஆம் தேதி பணம் எடுக்க சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த இளைஞரிடம் தனது வங்கி கணக்கில் எவ்வளவு இருப்பு இருக்கு என பார்த்து சொல்லவும் என கேட்டுள்ளார்.

அந்த இளைஞர் அவரது வங்கி கணக்கில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் உள்ளதாக கூறி அவரது ஏடிஎம் கார்டுக்கு பதிலாக மற்றொரு ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில்  தலைமறைவாகி 30 நிமிடத்திற்குள் முருகன் வங்கி கணக்கில் இருந்த அனைத்து பணத்தையும் சுருட்டி சென்றுள்ளார்.

செல் போனில் வந்த குறுந்தகவல் பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகன், எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்த இந்நிலையில் வாழப்பாடி அருகே ஏடிஎம் மையத்தில் சந்தேகத்தின் பெயரில் சுற்றிதிரிந்த இருவரை விசாரணை மேற்கொண்ட போது ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கத் தெரியாதவர்களிடம் இது போன்ற நூதன திருட்டில் ஈடுபட்டிருப்பதும் எடப்பாடியில் திருடியவர்களும் இவர்கள்தான் என உறுதி செய்த பின்னர் வாழப்பாடி போலீசார் இருவரையும் எடப்பாடி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணையில் இருவரும் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த சிவானந்தம், கதிரவன் என்பதும் தெரிய வந்தது . மேலும் எத்தனை இடத்தில் இது போன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். பல்வேறு இடங்களில் நூதன முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ள இச்சம்பவம் எடப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.