சென்னை புழல் அடுத்த காவாங்கரை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தவர் 43 வயதுடைய பாலாஜி. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள சிறுவாக்கம் பகுதியைச் சேர்ந்த இவர், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் ஏராளமான பெண்கள் பணியாற்றி வந்த நிலையில், பணியின் பெயரில் அவர்களிடம் பாலாஜி அடிக்கடி பெண்களிடம் நெருக்கமாக பழக முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் பழக மறுக்கும் பெண்களுக்கு அதிக பணி சுமை கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார் என சொல்லப்படுகிறது.
குறிப்பாக, புழல் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஊழியரிடம் அவர் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் பேசி தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. நாளடைவில், அந்த பெண்ணிடம் பாலாஜி எல்லை மீறி நடந்து கொண்டதுடன், பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பாலியல் ரிதியாக அத்துமீறிய நிலையில் இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அவரது செயல்களால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். எனவே நடந்த சம்பவம் குறித்து புழல் காவல் நிலையத்திற்கு சென்று பாலாஜி மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சூப்பர்வைசர் பாலாஜியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, பாலாஜி நிறுவனத்தில் பணிபுரியும் பல பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததும் மேலும் சில ஊழியர்களிடமும் அத்துமீறி நடந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் குடும்ப சூழ்நிலை, வேலை இழப்பின் அச்சம் மற்றும் சமூக காரணங்களால் இதுவரை வெளிப்படையாக புகார் அளிக்காமல் இருந்த நிலையில் இதனால் பாலாஜியின் செயல்கள் நீண்ட காலமாக வெளிச்சத்திற்கு வராமல் இருந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து போலீசார் பாலாஜியை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களிடம் அதிகாரத்தை பயன்படுத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த சூப்பர்வைசர் கைது செய்யப்பட்ட இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.