தாம்பரம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் 47 வயதுடைய ரமேஷ். இவருக்கு திருமணமாகி 45 வயதில் பூங்கொடி என்ற மனைவி உள்ள நிலையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ரமேஷ்க்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டதால், வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு ராயபுரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் தாமோதரன் (33), சவாரிக்காக ரமேஷின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பூங்கொடியின் செல்போன் எண்ணை பெற்ற தாமோதரன், அவருடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் நாளடைவில் இவர்களது உறவு திருமணத்திற்கு மீறிய தொடர்பாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் அவ்வப்போது வெளியில் செல்வது, தாமோதரன் பூங்கொடியின் வீட்டிற்கு செல்வது என பழகி வந்திருக்கின்றனர். இதற்கிடையில் சுமார் 9 மாதங்களுக்கு முன்பு பூங்கொடியின் வீட்டில் இருந்த இரும்பு கேட் பழுதடைந்துள்ளது. இதனை சரி செய்வதற்கு தாமோதரன் மூலம் தாம்பரத்தைச் சேர்ந்த வெல்டரான 38 வயதுடைய ஜெய்சங்கர் என்பவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கேட்டை சரி செய்துவிட்டு சென்ற ஜெய்சங்கர், பூங்கொடியின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு அவருடன் பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களாக இருவரும் தொடர்பில் இருந்த நிலையில், அவர்களுக்கிடையேயும் தகாத உறவு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக ஜெய்சங்கர் செல்போன் மூலம் பூங்கொடிக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது எண்ணை பூங்கொடி பிளாக் செய்துள்ளார்.
இதையடுத்து ஜெய்சங்கர் நேரடியாக பூங்கொடியின் வீட்டிற்குச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பூங்கொடி, தனது முதல் கள்ளக்காதலனான தாமோதரனை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வரவழைத்ததாக தெரிகிறது. அப்போது பூங்கொடியும் தாமோதரனும் சேர்ந்து ஜெய்சங்கரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டில் இருந்த இரும்புக் கம்பியால் ஜெய்சங்கரின் தலையில் இருவரும் சரமாரியாக தாக்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் பலத்த காயமடைந்த ஜெய்சங்கர் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரை வீட்டின் வாசலில் போட்டுவிட்டு, மாடியில் இருந்து தவறி விழுந்ததாக நாடகமாடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஜெய்சங்கர் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பூங்கொடியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஜெய்சங்கரை திட்டமிட்டு தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் தெரியவந்துள்ளது. இதையடுத்து பூங்கொடி மற்றும் தாமோதரனை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களாக ஜெய்சங்கர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததால் இந்த முடிவை எடுத்ததாக பூங்கொடி வாக்குமூலம் அளித்துள்ளர்
இதனைத் தொடர்ந்து பூங்கொடி மற்றும் தாமோதரன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முதல் கள்ளக்காதலனுடன் சேர்ந்து இரண்டாவது கள்ளக்காதலனை கொலை செய்ய முயன்றதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆலப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்