thiruvanamalai murder  
க்ரைம்

“என் பொண்டாட்டி தற்கொலை பண்ணிக்கிட்டா” - மனைவியை கொன்று தூக்கில் மாட்டிய கணவன்.. பிரேத பரிசோதனையில் வெளியான உண்மை!

காஞ்சனாவின் உடலில் காயங்கள் மற்றும் எலும்பு முறிவு இருப்பது...

Mahalakshmi Somasundaram

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் கேட்டவரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். கட்டிடத் தொழிலாளியான இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில், முருகன் தனது மனைவி காஞ்சனா மற்றும் மகனுடன் கேட்டவரம்பாளையம் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். முருகன் மற்றும் காஞ்சனா இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த (செப் 7) - ஆம் தேதி இரவு முருகன் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது மனைவியிடம் சாப்பாடு போடும்படி கேட்ட நிலையில் காஞ்சனா, காலையில் சமைத்த சாப்பாடும், முந்தைய நாள் செய்த கறிக்குழம்பும் இருப்பதாக கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த முருகன், “இன்று ஏன் சமைக்கவில்லை? வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? ஏன் செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்டு காஞ்சனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த முருகன், காஞ்சனாவை தாக்கியதில் அவர் மயங்கி வீட்டில் இருந்த படிக்கட்டில் விழுந்ததாக தெரிகிறது.

இதன் பின்னர், மது போதையில் இருந்த முருகன், வீட்டில் இருந்த பச்சை நிற புடவையை பயன்படுத்தி காஞ்சனாவின் கழுத்தை நெரித்ததாகவும், பின்னர் அவர் புடைவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது போல சடலத்தை புடவையில் மாட்டி தொங்கவிட்டுள்ளார். பின்னர் கொலையை மறைப்பதற்காக புடவையை கத்தியால் அறுத்துவிட்டு, காஞ்சனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி சத்தமிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆதமங்கலம்புதூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காஞ்சனாவின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காஞ்சனாவின் உடலில் காயங்கள் மற்றும் எலும்பு முறிவு இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது மரணத்தில் சந்தேகம் அடைந்த போலீசார் முருகனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் உண்மை என முருகன் ஒப்புக்கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால், மனைவியை தாக்கி கொலை செய்துவிட்டு, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதாக கூறப்படும் முருகனை போலீசார் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து முருகன் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த ஆதமங்கலம்புதூர் போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மனைவியை தாக்கி கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக கணவரே நாடகமாடியதாக கூறப்படும் சம்பவம் கேட்டவரம்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்