செங்கல்பட்டு மாவட்டம், பெருங்குடி கல்லுக்குட்டை, திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் 30 வயதுடைய ராஜதுரை. இவருக்கு ரோஸ்மேரி என்பவருடன் திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த 29 வயதுடைய அன்பு கணபதி என்பவருக்கும் நதியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று இரண்டு பெண் குழந்தைகளுடன் பெருங்குடி அவ்வையார் தெருவில் வசித்து வந்தார். ஒரே பகுதியில் வசித்து வரும் அன்பு மணி மற்றும் ரோஸ்மேரி ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். அன்பு கணபதியும் ரோஸ்மேரி தகாத உறவில் இருப்பதை அறிந்த ராஜதுரை இருவரையும் தங்களது உறவை கைவிடுமாறு பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த ராஜதுரை வேறு பகுதியில் குடியேற முடிவு செய்து வாடகைக்கு வீடை பேசிவிட்டு முன்பணம் கொடுத்துள்ளார் பின்னர் மீண்டும் வீட்டில் வந்து உறங்கி உள்ளார்.
இந்நிலையில் தூங்கி எழுந்து பார்க்கும் போது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அக்கம் பக்கத்தில் தேடியும் ரோஸ்மேரி கிடைக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜதுரை கள்ளக் காதலன் அன்பு கணபதியை பார்த்து “எனது மனைவி மற்றும் குழந்தை வீட்டிற்கு வரவில்லை என்றால் அதற்கு முழு காரணம் நீதான் உன்னை சும்மா விட மாட்டேன்” என்று கூறிவிட்டு மீண்டும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார்.
எங்கு தேடியும் ரோஸ்மேரி கிடைக்காததால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ராஜதுரை அன்பு கணபதியை கொலை செய்ய நினைத்து கத்தியை எடுத்து மறைத்து வைத்து கொண்டு அன்பு கணபதி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் சமாதானமாக பேசுவது போல நடித்து அவரை மது அருந்த பரணி தெருவில் உள்ள ஏரிக்கரைக்கு அழைத்து சென்று இருவரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது குடிபோதை தலைக்கேறிய நிலையில் ராஜதுரையை வம்பிழுக்க நினைத்து “நானும் உன் மனைவியும் கடந்த 4 மாதங்களாக கள்ளத் தொடர்பில் பழகி வருகிறோம்” என அன்பு கணபதி கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராஜதுரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அன்பு கணபதியின் வயிற்றுப் பகுதி, மார்பு மற்றும் கழுத்துப் பகுதியில் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். கத்தி குத்துடன் ரத்தம் வெளியேறிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கல்லுக்குட்டை பகுதியை நோக்கி அன்பு கணபதி ஓடியுள்ளார். தகவல் அறிந்த அவரது மனைவி நித்யா கணவரை மீட்டு வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அன்பு கணபதி உயிரிழந்தார்.
பின்னர் தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற தரமணி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ராஜதுரையை தரமணி போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.