க்ரைம்

“அரசு பள்ளியில் பெண் ஆசிரியருக்கு பாலியல் தொல்லை” - தலைமை ஆசிரியர் செய்த தொடர் டார்ச்சர்.. கோவிலாங்குளம் போலீசார் நடவடிக்கை!

பணியாற்றி வரும் பெண் ஆசிரியைக்கு பஞ்சராஜ் நேரில் மற்றும் தொலைபேசியில் தொடர்ந்து பாலியல் தொந்தரவு...

Mahalakshmi Somasundaram

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த உதவி தலைமை ஆசிரியர், சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பவம் கல்வித்துறை மற்றும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சங்கரன்கோவில் அருகே பெரிய கோவிலாங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதால், சங்கரன்கோவில் காந்தி நகர் முதல் தெருவைச் சேர்ந்த ராமசாமியின் மகன் பஞ்சராஜ், உதவி தலைமை ஆசிரியராக (AHM) பொறுப்பு வகித்து வந்தார்.

இந்த நிலையில், அதே பள்ளியில் பணியாற்றி வரும் பெண் ஆசிரியைக்கு பஞ்சராஜ் நேரில் மற்றும் தொலைபேசியில் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது செயல்பாடுகள் குறித்து பலமுறை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும், எச்சரிக்கப்பட்ட பிறகும் நடத்தையில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர் சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

முதற்கட்ட விசாரணையில், பெண் ஆசிரியைக்கு பாலியல் சீண்டல் மற்றும் தொந்தரவு அளித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, பஞ்சராஜ் மீது தொடர்புடைய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட இந்தச் சம்பவம், கல்வித்துறை வட்டாரத்திலும், அப்பகுதி மக்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.