Tenkasi Murder Case 
க்ரைம்

“நூடுல்ஸ் மாஸ்டருடன் கள்ளக்காதல்” - பக்கா பிளான் போட்டு கொல்லப்பட்ட கணவன்.. ஒரு வாரத்திற்கு பின் சிக்கிய நிஷா!

ஒரு ஹோட்டலில் சைனீஸ் மாஸ்டராக வேலை பார்த்து வருவது தெரிய வந்தது...

Mahalakshmi Somasundaram

தென்காசி மாவட்டம், தென்காசியில் இருந்து திருமலைக்கோவில் செல்லும் பிரதான சாலை அருகே உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த இலத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், ஒரு வாரம் கடந்தும் எந்த விதமான துப்பும் கிடைக்காததால் குற்றவாளிகளை பிடிப்பதில் போலீசாருக்கு கடுமையான சிரமம் ஏற்பட்டு வந்தது. சடலம் கிடந்த பகுதிகளில் உள்ள பல்வேறு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து போலீசார் ஆய்வு செய்து வந்த நிலையில், சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நேரத்தில் அந்த வழியாக ஒரு வாடகை கார் சென்றுள்ளது. அந்த வாடகை காரை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த வாடகை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தது என்பது தெரிய வந்தது. அங்கு விரைந்த தென்காசி போலீசார் வாடகை கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். தென்காசி பகுதியில் சேர்ந்த மகேஷ் குமார் என்பவர் தனது வாடகை காரை வாடகைக்கு அழைத்து சென்றதாக அந்த காரின் ஓட்டுனர் தெரிவித்துள்ளார். எனவே மகேஷ் குமாரை போலீசார் தேடிய போது, அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சைனீஸ் மாஸ்டராக வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

murder spot

விசாரணையை பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த அப்தவித் ரஹ்மத் என்பவரது மனைவியான கம்சா என்ற நிஷா அடிக்கடி மகேஷ் குமார் பணிபுரிந்த கடைக்கு நூடுல்ஸ் வாங்க சென்று வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்னர் ஒன்றாக சேர்ந்து வாழ நினைத்த இருவரும் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவர் அப்தவித் ரஹ்மத்தை கொலை செய்ய திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து ஷட்டர் வேலை செய்யும் அப்தவித் ரஹமத்தை மகேஷ் குமார் அணுகி தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் ஷட்டர் வேலை இருப்பதாகவும், எவ்வளவு பணம் கேட்டாலும் தருகிறேன் எனக்கூறி ரஹ்மத்தை, மகேஷ் குமார் காரில் அழைத்து வந்து தோட்டத்திற்குள் சென்று அளவெடுக்க கூறியுள்ளார். அப்போது, பின்னால் இருந்து மகேஷ் குமார் கிரைண்டர் கல்லால் ரஹ்மத்தை தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்து விட்டு, மீண்டும் அதே காரில் மகேஷ் குமார் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில், தற்போது மகேஷ் குமார் மற்றும் அவரது கள்ளக்காதலி கம்சா என்ற நிஷா ஆகிய இருவரையும் இலத்தூர் போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் பிரச்சினையில் திட்டம் போட்டு கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனை மனைவியே தீர்த்து கட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்