கடந்த வாரம், 40 வயதான விஷால் சால்வி, தனது மனைவி ஷில்பா சால்வி (39) காணாமல் போனதாக குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கோடதாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உணவியல் நிபுணரான தனது மனைவி, நான்கு நாட்களுக்கு முன்பு கடைசியாக காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். காணாமல் போனவர் குறித்த விசாரணையை தொடங்கிய போது விஷால் சால்வி-யே காணாமல் ஒரு வியத்தகு திருப்பத்திற்கு காரணமானார்.
அவன் தவிர விட்ட ஒரு துருப்பு சீட்டு காவலர்களுக்கு, ஒரு பாழடைந்த வீட்டிற்கும், அங்கே இருந்த ஒரு மர்மமான மரப்பெட்டிக்கும் வழி காட்டியது. காவல்துறையினர் அந்தப் பெட்டியைத் திறந்தபோது, நுரை மற்றும் சிமெண்ட் கலவையில் ஷில்பாவின் உடல் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டனர். பின்னர், காவல்துறையினர் புறநகர் பகுதியில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் இருந்து கணவன் விஷால் சால்வியை கைது செய்தனர்.
காவல்துறை விசாரணையின்படி, ஷில்பாவும் விஷாலும் 2010-ல் திருமணம் செய்துகொண்டதாகவும், அவர்களுக்கு 13 மற்றும் எட்டு வயதுடைய இரண்டு மகன்கள் உள்ளதாகவும் தெரியவந்தது. ஷில்பா, உணவு மற்றும் ஊட்டச்சத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, மாநகராட்சி நடத்தும் சூரத் முனிசிபல் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உணவியல் நிபுணராகப் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் சமீபத்தில் தனது சொந்த கிளினிக்கை திறந்ததாகக் கூறப்படுகிறது. மறுபுறம், விஷால் ஒரு வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததாகவும், மேலும் கடந்த சில ஆண்டுகளாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்ததாகவும் தெரிகிறது.
கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை நடந்துள்ளது, மேலும் ஷில்பாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக விஷால் சந்தேகித்துள்ளார். காவல்துறையினர் தன்னை தேடுவது தெரிந்த விஷால் தலைமறைவான பிறகு விஷாலின் மகன் கண்டெடுத்த ஒரு ஒப்புதல் கடிதம், இந்தக் கொடூர குற்றத்தின் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. அந்தக் கடிதத்தில், “தானே ஒரு குற்றம் செய்ததாகவும், தனது மனைவி ஷில்பாவின் உடல் சலாபத்புராவில் உள்ள தனது மூதாதையர் வீட்டில் இருப்பதாகவும்” விஷால் எழுதியிருந்தார்.
மேலும் அந்தக் கடிதத்தில், “திருமணத்தின் ஆரம்பம் இனிமையாக இருந்தது. ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மனைவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக இதை பொறுத்து வாழ்ந்து வந்தேன். இறுதியில் மன அழுத்தத்தால் இந்தக் குற்றத்தை செய்தேன்,” என அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், “இந்தக் குற்றத்திற்கு பொறுப்பு நானே. வேறு யாருக்கும் இதில் தொடர்பில்லை,” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு போலீசார் சலாபத்புராவில் உள்ள பழைய வீட்டைச் சோதனை செய்தனர். அப்போது, புதிதாக சிமெண்ட் பூசப்பட்டிருந்த மரப்பெட்டி ஒன்று சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதைத் திறந்தபோது, உள்ளே அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில், சடலம் சுமார் 4 முதல் 5 நாட்களுக்கு முன்பு இறந்ததாகவும், துர்நாற்றத்தை மறைக்க சிமெண்ட் மற்றும் நுரைக் கலவையில் புதைக்கப்பட்டதாகவும் தெரியவந்தது.
இதுகுறித்து சூரத் காவல் துணை ஆணையர் கூறுகையில், “39 வயதான ஷில்பா சால்வி காணாமல் போனதாக அவரது கணவர் புகார் அளித்திருந்தார். பின்னர் அவர் எழுதிய ஒப்புதல் கடிதத்தின் மூலம் விசாரணை புதிய திசை பெற்றது. சோதனையில் அவரது சடலம் மீட்கப்பட்டது,” என்றார். ஷில்பாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், விஷால் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொடூர செயல் சூரத் நகரை அதிர்ச்சியடையசெய்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.