தெலங்கானாவில் குடும்ப கவுரவத்திற்காகாக 17 வயதுடைய பெண்ணை தாயும், பாட்டியும் சேர்ந்து கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
வாரங்கல் மாவட்டத்தில் உள்ள பர்வதகிரியை சேர்ந்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் தாயார் மற்றும் பாட்டி அவரை கண்டித்துள்ளனர். ஆனால் தனது காதலை விட மறுத்த சிறுமி, அந்த இளைஞரை தான் திருமணம் செய்துகொள்வேன் என உறுதியாக இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் பெற்ற மகள் என பாராமல் கடந்த 19-ம் தேதி இரவு தூங்கி கொண்டிருந்த சிறுமியின் முகத்தில் தலையணையை போட்டு அழுத்தி கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்து வந்து போலீசார், விசாரித்த போது அவர் மூச்சுதிணறலால் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
ஆனால் சந்தேகமடைந்த போலீசார் தாயையும், பாட்டியையும் தீவிரமாக விசாரித்த போது, குடும்ப கவுரவத்திற்காக பெற்ற மகளையே கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.