க்ரைம்

ஆசை வார்த்தைக் கூறி  40 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்!! வாட்ஸ்-அப்பில் வீடியோ அனுப்பிவிட்டு தொழில் அதிபர் தற்கொலை!!

தன்னிடம்  40 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றியதாக வீடியோவில் பேசி அதனை வாட்ஸ்-அப்பில் அனுப்பிவிட்டு தொழிலதிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நெல்லையில் அரங்கேறியுள்ளது.

Tamil Selvi Selvakumar

நெல்லை மாவட்டம் முக்கூடல் அண்ணாநகரை சேர்ந்தவர் முருகன். இவர் மதுரையில் சொந்தமாக கேட்டரிங் தொழில் செய்து வந்தார். அதுமட்டுமில்லாமல்  பணம் கொடுக்கல்-வாங்கல், கடன் வாங்கி கொடுப்பது போன்ற தொழிலும் செய்து வந்துள்ளார். இதற்காகவே மதுரையில் முருகன் தனது குடும்பத்துடன் வசித்து வந்தாா்.  

ஆனால் சில நாட்களாக தனது குடும்பத்தை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு, நெல்லையில் உள்ள ஓட்டல்களில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில்  அறை எடுத்து தங்கிய முருகன், செல்போனில் பேசிய வீடியோ காட்சி ஒன்றை தனது மனைவி மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைத்துவிட்டு, பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனை பார்த்த ஓட்டல் காரர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே முருகன் விஷம் குடிப்பதற்கு முன்பாக அனுப்பிய வீடியோ காட்சியை  அவரது மனைவி போலீசாரிடம் காண்பித்து புகார் அளித்தார். போலீசார்  அதை ஆய்வு செய்த போது, அதில் ‘‘தன்னிடம் இருந்து ரூ.40 லட்சம் வரை மதுரையை சேர்ந்த ஒரு பெண் வாங்கி கொண்டார். அந்த பெண்ணுடன் மேலும் சிலர் சேர்ந்து தன்னை மிரட்டி, கடனாளியாக ஆக்கிவிட்டனர். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்வதாகவும், தன்னுடைய சாவுக்கு அந்த பெண் மற்றும் அவருடன் சேர்ந்தவர்களே காரணம்’’  என்றும் முருகன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து முருகனை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று ம்ுருகனின் குடும்பத்தார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், முருகனின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து நேற்று மாலை முருகன் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.