க்ரைம்

அதிவேகமாக வந்து விபத்தில் சிக்கிய கார்... சோதனையில் யானை தந்தங்கள், மான் கொம்பு பறிமுதல்...

சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலை பகுதியில் அதிவேகமாக வந்து விபத்துக்குள்ளான காரை சோதனை செய்தபோது அதில் யானை தந்தங்கள், மான் கொம்பு உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Malaimurasu Seithigal TV

சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் தறிகெட்டு அதிவேகமாக வந்த காரொன்று, கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் உட்பட 5 வாகனங்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த வில்சன், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர் காயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநரான ராதாகிருஷ்ணன் (56) என்பவரை விசாரித்தபோது அவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்பதும், அதிக அளவில் குடித்துவிட்டு வாகனத்தை செலுத்தியதுமே விபத்திற்கு காரணம் எனத் தெரியவந்தது.

இந்த விபத்து தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்துப் புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிபோதையில் கார் ஓட்டி வந்த வழக்கறிஞரான ராதாகிருஷணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கிய Nano காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்த நிலையில் போலீசார் அந்த வாகனத்தை சோதனை மேற்கொண்டனர். 

அப்போது அந்த காரில் ஒரு பிளாஸ்சிக் கவரில் 6 யானைத் தந்தங்கள், மான்கொம்பு உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து அவற்றை கைப்பற்றிய போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

மேலும், அந்த காரை ஓட்டி வந்த வில்சன் என்பவரிடம் இது தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆப்ரிக்காவில் உள்ள தனது உறவினர்கள் அன்பளிப்பாக இவற்றைக் கொடுத்ததாக வில்சன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.