க்ரைம்

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; தாமாக முன்வந்து உயர்நீதி மன்றம் விசாரணை!

Malaimurasu Seithigal TV

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவித்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து இன்று விசாரணைக்கு எடுக்கிறது.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2006-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வந்தது. கடந்த 2022- நவம்பரில் இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வசந்தலீலா, போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தாலும், உரிய சாட்சியங்கள், முகாந்திரம் இல்லாததாலும் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் விடுவித்து தீர்ப்பளித்தார். 

கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்படாமால் இருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து இந்த மேல்முறையீட்டு வழக்கை இன்று விசாரணைக்கு எடுக்க உள்ளார்.