க்ரைம்

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை மடக்கி பிடித்த போலீசார்...!

தாம்பரம் அருகே வீடு புகுந்து பணம், நகைகள் மற்றும் காரை திருடிய குற்றவாளிகளை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்

Malaimurasu Seithigal TV

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் கிருபா(35). இவர், தனது வீட்டை பூட்டி விட்டு சூளைமேட்டில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றிருந்த போது, தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக தன் வீட்டில் வேலை பார்ப்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறியதாகவும், வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டு கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து கார் சாவியை திருடி வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை அடையாளம் தெரியாத நபர்கள் எடுத்து சென்றுவிட்டதாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் சேலையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் நேற்று,  கிழக்கு தாம்பரம், எம்.சி.சி பேருந்து நிலையம் அருகில் போலீசார் வாகன தனிக்கை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள்  காவலர்களை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றனர். பின்னர் அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

அந்த விசாரணையில் காரை திருடியவர்கள், பம்மல் பகுதியை சேர்ந்த நிக்சன்(25) , திரிசூலம் பகுதியை சேர்ந்த செவ்ராஜ்(38) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் அவர்களிடம் இருந்து கார், டிவி மற்றும் 11 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 20 சவரன் தங்க நகைகளை, 240 கிராம் வெள்ளி பொருட்களை  கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.