க்ரைம்

தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காவலர் சிகிச்சை பலனின்றி இறப்பு!!!

தொடர்ந்து பல காவலர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது மேலும் இரண்டு போலீசார் தற்கொலை முயற்சி செய்து உயிரிழந்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள மணிமுத்தாறில் 9 மற்றும் 12 -ம் அணி காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு போலீசார் உள்பட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி காவலர்கள் உள்ளனர். இந்த நிலையில் மதுரை பகுதியை சேர்ந்த 2016 பேட்ஜ் போலீஸ் தமிழ்செல்வன் (வயது 29) என்பவர் மணிமுத்தாறு 12 -ம் அணி பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 5 -ந் தேதி பட்டாலியனில் உள்ள அறையில் திடீரென தனது உடலில் மண் எண்ணையை உற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்உடனடியாக இதுகுறித்து தகவலறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் தமிழ்செல்வனை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த காவலர் தமிழ்செல்வன் நேற்று நெல்லை அரசு மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணையில், தமிழ் செல்வன் திருமணமாகாத விரக்த்தியில் தீக்குளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தனியார் விடுதியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட  காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன் உடல் உடற்கூறுஆய்வுக்கு பின்னர் மனைவி மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக அங்கு வந்த  நீதிபதிகள் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் மற்றும் நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபனின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் இறுதி சடங்கிற்காக பார்த்திபனின் சொந்த ஊர் ஆன திருத்தணிக்கு  உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த இரு சம்பவங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.