க்ரைம்

நண்பர்களிடையே வாய் தகராறு...தூங்கிக்கொண்டிருக்கும் போது வாலிபர் குத்திக்கொலை!!

ஒரகடம் அருகே தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tamil Selvi Selvakumar

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வாரணவாசி பகுதியில் உள்ள கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்துரு மற்றும் தினேஷ். நண்பர்களாகிய இருவரும் கூழித்தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்துருக்கும், தினேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கலைந்து சென்றுள்ளனர்.

பின்னர்  இரவு 9 மணியளவில் அந்த பகுதியில் உள்ள கடையின் முன்பு இருந்த கட்டிலில் சந்துரு தூங்கி கொண்டிருந்தார். அப்போது போதையில் அங்கு வந்த தினேஷ், ஆத்திரத்தில் சந்துருவின் வயிறு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். கத்திக்குத்து பட்டதில் சந்துரு ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்துள்ளார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரகடம் போலீசார் சந்துருவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்துரு பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த கொலை எதற்காக நடந்தது? முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சந்துருவின் உறவினர்கள் வாரணவாசி அருகே குற்றவாளியை கைது செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும்  குற்றவாளியை கைது செய்து விட்டதாக அவர்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.