க்ரைம்

சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் அதே பாணியில் ஈடுபட்டு சிக்கிய திருடன்...

சென்னையில் முதியவர்களின் ஏடிஎம் கார்டுகளை நூதனமுறையில் பறித்து பணத்தை திருடியதற்காக கைது செய்யப்பட்ட இளைஞர், சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் அதே பாணியில் திருட்டில் ஈடுபட்டு காவல்துறையில் சிக்கியுள்ளார்.

Malaimurasu Seithigal TV
சென்னை மூலக்கொத்தளம் பகுதியை சேர்ந்த சுகந்தி, ராஜாஜி சாலையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு உதவி செய்வது போல் நடித்த  வடமாநில இளைஞர் ஒருவர், அவரது ஏஎடிஎம் கார்டை வாங்கியுள்ளார். அவரின் ரகசிய எண்ணை பெற்றுக் கொண்ட இளைஞர், ஏடிஎம் மில் பணம் வரவில்லை எனக் கூறியதுடன், அவருடைய ஏடிஎம் கார்டுக்கு பதிலாக வேறொரு கார்டை மாற்றி வழங்கியுள்ளார்.
இதை அறியாமல் வாங்கிச் சென்ற சிறிது நேரத்தில் சுகந்தியின் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு லட்ச ரூபாய் பணம் எடுக்கப்பட்டது. மேலும் அந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி  99 ஆயிரம் ரூபாய்க்கு நகைகளை வாங்கியதற்கான குறுந் தகவலும் சுகந்தியின் செல்போனுக்கு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுகந்தி வடக்கு கடற்கரை காவல்நிலையத்தில் புகாரளித்தார்
இதையடுத்து பணம்  எடுக்கப்பட்ட ஏடிஎம் மற்றும் நகை வாங்கிய கடையின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த காவல்துறையினர், ஏடிஎம் கார்டை திருடி மோசடியில் ஈடுபட்ட நபர் பீகாரைச் சேர்ந்த சந்தன் சகானி என்பதை கண்டுபிடித்தனர். மேலும் அவர் இதேபோன்று ஏற்கனவே மோசடியில் ஈடுபட்டு தண்டனை பெற்றுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த காவல்துறையினர், 24 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 10 போலி ஏடிஎம் கார்டுகளை  பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.