க்ரைம்

திருமணத்துக்கு மறுத்த சிறுமிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வாலிபர்...

பண்ருட்டியில் திருமணத்துக்கு மறுத்த சிறுமிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Malaimurasu Seithigal TV
கடலூர் மாவட்டம் சின்ன பேட்டையை சேர்ந்த சிவகுமார் என்பவரின் மகன் பாண்டியன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி, தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பான வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்த பாண்டியன், மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்த சிறுமியை மிரட்டியுள்ளார்.
மேலும், ‘திருமணத்திற்கு மறுத்தால், தான் விஷம் குடித்து இறந்து விடுவேன் என்று கூறிய பாண்டியன், இல்லை எனில் நீ விஷம் குடித்து இறந்து போ எனக் கூறி, கடந்த 2ஆம் தேதி சிறுமிக்கு விஷம் கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி விஷம் குடித்ததை அடுத்து, புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், கொலை முயற்சி மற்றும் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாண்டியனை தேடி வந்தனர். இதற்கிடையில், சிறுமி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமிக்கு விஷம் கொடுத்த பாண்டியனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.