க்ரைம்

2 கோயில்களில் அடுத்தடுத்து கைவரிசை காட்டிய மர்மநபர்கள் - போலீசார் விசாரணை!

Tamil Selvi Selvakumar

திருப்பத்தூர் அருகே அடுத்தடுத்து இரண்டு கோயில்களில் தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.  
 
திருப்பத்தூர் அடுத்த சின்ன கன்னாலபட்டி, கலப்புகாரவட்டம் பகுதியில் உள்ள தேசத்து மாரியம்மன் கோவிலில் வழக்கம் போல் பூஜை முடிந்து மாலை நேரத்தில் பூசாரி கோவிலை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க நகை மற்றும் முப்பதாயிரம் மதிப்பிலான இரண்டு வெள்ளி குத்து விளக்குகள், கோவிலில் உண்டியலில் இருந்த 30 ஆயிரம் மதிப்பிலான பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் கோவில் உண்டியலை கோவிலில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் உள்ள வாழை தோப்பில் உண்டியலை வீசி சென்றுள்ளனர்.

அதேபோல் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்மினிகொல்லிமேடு பகுதியில் உள்ள ஓம்சக்தி கோவிலில் புகுந்து ஒரு பவுன் தங்கச் சங்கிலி, வெள்ளி மற்றும் பூஜைக்கு பயன்படுத்தும் வெண்கலம் பொருட்களையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதி கோயில்களில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்கதையாக உள்ளதால், இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.