3 boys involving in theft  
க்ரைம்

“ஒரே வீட்டில் இரண்டு முறை கை வரிசையை காண்பித்த திருடர்கள்” - தெரு நாய் மூலம் சிக்கியது எப்படி!? விசாரணையில் வெளியான ருசிகர தகவல்!!

உடனே பொதுமக்கள் ஓடிச் சென்று இருவருக்கும் தர்ம அடி கொடுத்து பிடித்து சூளைமேடு காவல் நிலையத்தில் ....

மாலை முரசு செய்தி குழு

ஆடுகளை திருடி கொண்டு பைக்கில் தப்பிச் சென்ற போது குறுக்கே வந்த தெருநாய் மீது மோதி கீழே விழுந்தவர்களை பொதுமக்கள் காப்பாற்றிய போது ஆடு திருட்டில் ஈடுபட்டது அம்பலம்.

சென்னை சூளைமேடு சுப்பாராவ்  சாலையில் நேற்று இரவு மதுபோதையில் இருவர் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக தெருநாய் ஒன்று சாலை குறுக்கே ஓடிவந்தது பைக்கில் வந்தவர்கள் கட்டுப்பாட்டை இழந்து நாய் மீது மோதி இருவரும் கீழே விழுந்தனர். 

இதனைப்  பார்த்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து காயமடைந்த இருவரையும் மீட்க முயற்சி செய்தனர். அப்போது ஒருவர் ஓட்டம்பிடிக்க மற்றொருவர் இருசக்கர வாகனத்தை தள்ளிச்செல்ல முயன்றனர்.  மேலும் அவர்கள் கையில் ஒரு ஆடு இருப்பதை பார்த்த பொதுமக்கள் இது குறித்து அவர்களிடம் விசாரித்த போது இருவரும் ஆடுகளை திருடி கொண்டு தப்பி சென்ற போது நாய் மீது மோதி சிக்கியது தெரியவந்தது.

 ‌உடனே பொதுமக்கள் ஓடிச் சென்று இருவருக்கும் தர்ம அடி கொடுத்து பிடித்து சூளைமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட நபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அமைந்தகரை பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (30), பிரஜன் குமார் (27) என்பது தெரியவந்தது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தாம்பரம் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு, அந்த வாகனத்தில் நம்பர் பிளேட்டை உடைத்து சுற்றி வந்ததும், அந்த திருட்டு வாகனத்தை வைத்துக்கொண்டு, தனது கூட்டாளிகள் மேலும் இருவருடன் சேர்ந்து சூளைமேடு காந்தி ரோடு பகுதியில் உள்ள லத்தீப் வீட்டில் வளர்த்து வந்த  இரண்டு ஆடுகளை திருடி சென்று ஒரு ஆடு விற்று முன்பணமாக 1000 ரூபாய் பெற்றதும், பின்னர் போதையில் அதே வீட்டில் மேலும் ஒரு ஆட்டை திருடி செல்லும் போது நாய் மீது மோதி பொதுமக்களிடம் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக லத்தீப் வீட்டில் ஆடு மேய்க்க வரும் நபருடன் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு பழக்கம் இருந்ததும், அப்போது வீடு திறந்திருக்கும் என்பதை அறிந்து ஆட்டை திருடியதும் தெரியவந்தது, மதுபோதைக்கு பணமில்லாததால் அவசரமாக பணத்திற்காக ஆட்டை திருடியதும் தெரியவந்துள்ளது.  இதனை அடுத்து சூளைமேடு போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். 

மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் ஆட்டை வாங்கிய வடபழனி ஜெய் நகரில் உள்ள சரவணன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர் கறிக்கடை வைத்து நடத்தி வருவதும் தெரியவந்தது.  

போதையில் வேகமாக இருசக்கர வாகனத்தை திருடிவந்து சாலையில் கிடந்த நாய் மீது மோதியதில் நாய் உயிரிழக்க, இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர், இருசக்கர வாகனம் சரியில்லாமலும், சந்தேகத்திற்கிடமாக ஓடியதால் சந்தேகம் ஏற்பட்டு அவர்களை பிடித்துக் கொடுக்கும் போது தான் அவர்கள் ஆடு திருடியதும் தெரிய வந்ததாக பிடித்துக் கொடுத்த சரண் என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தப்பி ஓடிய அவர்களது கூட்டாளிகள் இருவரை சூளைமேடு போலீசார் தேடிவருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.