திருநெல்வேலி மாவட்டம், மானூர், குப்பனா புரத்தைச் சேர்ந்தவர் 24 வயதுடைய அந்தோணி. இவர் ராமையன்பட்டியில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த நிலையில் இவருக்கும் மேல இலந்தை குளத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பாக்கியம் என்பவருக்கும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்களிலேயே பாக்கியத்தை வேலைக்குச் செல்லுமாறு அந்தோணி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் மறுத்துவிடவே, பாக்கியத்தை அவரது வீட்டில் இருந்து கூடுதலாக நகை மற்றும் பணம் வாங்கி வருமாறு அந்தோணியும் அவரது தாயாரும் அடிக்கடி தொல்லை செய்து வந்திருக்கின்றனர் .
அதுமட்டுமல்லாமல் அந்தோணி ‘நகை பணம் கொண்டு வந்தால்தான் நான் உன்னோடு வாழ்வேன் இல்லையென்றால் உன்னோடு வாழ மாட்டேன். நாங்கள் கேட்டது போல கொண்டு வரவில்லை என்றால் உன் வீட்டுக்கு போய் விடு’ என்று அந்தோணியும் அவரது தாயாரும் பாக்கியத்தை அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குப்பனா புரத்தில் உள்ள தேவ ஆலயத்திற்கு பாக்கியமும் அவரது கணவர் அந்தோணியும் சென்றிருக்கின்றனர். பின்னர் இருவரும் ஆராதனை முடிந்து வீட்டுக்கு சென்றுள்ளார்.
அதனை தொடர்ந்து தங்களது விவசாய நிலத்திற்கு சென்ற அந்தோணி தனது மனைவி பாக்கியத்தை ‘நிலத்திற்கு வா விறகு வெட்டி கொண்டு செல்ல வேண்டும்’ என்று போன் செய்து அழைத்துள்ளார். எனவே மனைவி பாக்கியமும் கணவர் கூப்பிடுகிறார் என்றவுடன் உடனே நிலத்திற்கு சென்றுள்ளார். விறகு வெட்டி கொண்டிருந்த இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்தோணி, தான் வைத்திருந்த துண்டால் பாக்கியத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் அவரது உடலை தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் வீசி விட்டுச் சென்றுள்ளார் இந்த சம்பவத்தின் போது அந்தோணியின் தாயும் அவருடன் இருந்ததாக கூறப்படுகிறது.
பிறகு அந்தோணி மாலை நேரத்தில் தனது மனைவி பாக்கியத்தை காணவில்லை என்று கூறி தேடுவது போல நாடகமாடி உள்ளார். மேலும் தனது தாயார் மூலம் மானூர் போலீஸ் நிலையத்தில் 'மருமகளைக் காணவில்லை' என்று புகார் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் தகவல் அறிந்து வந்த மானூர் காவல் துறையினர் பாக்கியத்தை தேடிப் பார்த்த போது அப்பகுதியில் உள்ள கிணற்றில் பாக்கியத்தின் உடல் மிதந்ததுள்ளது. இதற்கிடையே, பாக்கியத்தின் அண்ணன் ஆண்டனியும் தனது தங்கையின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, வரதட்சணை கொடுமை மற்றும் சந்தேகம் குறித்து புகார் அளித்தார்.
இவற்றை வைத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அந்தோணி முன்னுக்குப் பின் முரணாகப் பேசி இருக்கிறார். போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தபோது, அவரே மனைவி பாக்கியத்தை கழுத்தை நெரித்துக் கொன்று கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.