திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதுடைய டில்லிபாபு. இவர் திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். நேற்று மதியம் இவர் பணிபுரியும் கம்பெனிக்கு வந்த இரண்டு பேர் டில்லிபாபு உடன் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக டில்லி பாபுவை வெட்டி விட்டு பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த டில்லிபாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்த கம்பெனியின் மற்ற ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார் உயிரிழந்த டில்லி பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன என்பதை குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது 24 வயதுடைய வினோத் மற்றும் அவரது நண்பர் மோகன் என தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வினோத் மற்றும் மோகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் வினோத்தின் மனைவி நிவேதாவுடன் டில்லிபாபுவிற்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் நாளடைவில் அந்த உறவு கள்ளக்காதலாக மாறியதாக சொல்லப்படுகிறது. நிவேதாவின் மீது சந்தேகமடைந்த வினோத் தனது மனைவியை கண்காணித்து அவர் டில்லி பாபுவுடன் பழகி வந்ததை கண்டறிந்துள்ளார். பின்னர் தனது மனைவியிடம் “நம்ம வாழ்க்கைக்கு நீ இப்படி பண்றது சரி வராது” என கூறி டில்லி பாபுவின் உறவை கைவிட கூறியுள்ளார்.
மேலும் டில்லி பாபுவை போனில் தொடர்பு கொண்டு இது குறித்து எச்சரித்துள்ளார். இருப்பினும் இருவரும் தொடர்ந்து பழகிவந்திருக்கின்றனர். எனவே நேற்று முன்தினம் இரவு மீண்டும் வீட்டின் அருகே இது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த வினோத் தனது நண்பரை அழைத்து வந்து டில்லி பாபு பணிபுரியும் கம்பெனிக்கு நேரடியாக சென்று அவரை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட கள்ளக்காதலனை கணவனே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.