Karalapakkam Murder Case 
க்ரைம்

“மூட்டையில் இருந்த அழுகிய பெண் சடலம்” - சுத்தியலால் அடித்து கொன்ற கள்ளக்காதலன்.. செல்போனில் சிக்கிய அதிரவைக்கும் பின்னணி!

சடலத்திலிருந்து துர்நாற்றம் வெளியேறாமல் இருக்க துணியால் மூட்டை கட்டி வீட்டிற்குள் மறைத்து வைத்ததும்...

Mahalakshmi Somasundaram

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரலப்பாக்கம் யாதவர் தெருவில், பெண் ஒருவர் சுத்தியால் அடித்துக் கொலை செய்யப்பட்டு, சடலம் துணியால் மூட்டையாக கட்டி வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரலப்பாக்கம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த லதா, கடந்த மூன்று நாட்களாக பணிக்கு வரவில்லை. எனவே சக ஊழியர்கள் அவரது செல்போனை தொடர்புகொண்டபோது, அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், உடல்நலக்குறைவு காரணமாக அவர் வீட்டில் இருப்பதாக நினைத்துள்ளனர்.

இந்நிலையில், லதா வசித்து வந்த வீட்டின் அருகே சில நாட்களாக கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது ரத்தக்கறைகளுடன் மூட்டை ஒன்று கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முத்தாபுதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டை சோதனையிட்டனர். அப்போது, மூட்டையை பிரித்து பார்த்ததில் அழுகிய நிலையில் லதாவின் சடலம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Thiruvallur Latha Murder

முதற்கட்ட விசாரணையில், லதா கொலை செய்யப்பட்டு சுமார் மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். கரலப்பாக்கம் கிராமப்புற பகுதி என்பதால் போதிய சிசிடிவி கேமரா பதிவுகள் இல்லாத நிலையில், கொலையாளியை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சவால் ஏற்பட்டது. இதையடுத்து, லதாவின் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போலீசார், அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த மற்றொரு செல்போன் எண்ணை கண்டறிந்தனர். அந்த செல்போன் எண், லதா வசித்த வீட்டின் அருகிலேயே பயன்படுத்தப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் அந்த செல்போன் எண்ணை பயன்படுத்திய முனிவேல் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, முனிவேல் லதாவுடன் நெருக்கமாக பழகி வந்ததும், இருவருக்கும் இடையே பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் லதாவை சுத்தியால் தாக்கி கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கொலை செய்த பின்னர் சடலத்திலிருந்து துர்நாற்றம் வெளியேறாமல் இருக்க துணியால் மூட்டை கட்டி வீட்டிற்குள் மறைத்து வைத்ததும், கொலை நடந்த பின்னரும் முனிவேல் அதே பகுதியில் எவ்வித பதற்றமும் இல்லாமல் சுற்றித்திரிந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முனிவேலை கைது செய்த முத்தாபுதுப்பேட்டை போலீசார், அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிசிடிவி ஆதாரமே இல்லாத நிலையில், செல்போன் எண்ணை வைத்து போலீசார் துப்பு துலக்கி கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்த சம்பவம் கரலப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்