திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பெரும்பேடு பகுதியை சேர்ந்தவர் 31 வயதுடைய ராஜேஷ். இவர் கொத்தனார் வேலை செய்து வரும் நிலையில் இவருக்கும் 20 வயதுடைய கௌசல்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ராஜேஷுக்கு தூரத்து உறவினரான கௌசல்யா இளநிலை பட்டப்படிப்பு முடித்து விட்டு இளங்கலை கல்வியியல் படித்து வரும் நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து கல்லூரிக்கு சென்று வந்திருக்கிறார்.
கடந்த (பிப் 07) ஆம் தேதி வழக்கம் போல ராஜேஷ் கொத்தனார் வேலைக்கு சென்ற நிலையில் அன்று கல்லூரி விடுமுறை என்பதால் கௌசல்யா வீட்டில் இருந்திருக்கிறார். அன்று மதியம் ராஜேஷுக்கு போன் செய்த அக்கம் பக்கத்தினர் ‘வீட்டில் கௌசல்யா மயங்கி கிடக்கிறார்’ என கூறிய நிலையில் வீட்டிற்கு சென்ற ராஜேஷ் தனது மனைவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு கௌசல்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜேஷ் கௌசல்யாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த கௌசல்யாவின் பெற்றோர்கள் மகளின் முகம் மற்றும் கழுத்தில் காயம் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்து காவல் துறையினரிடம் புகாரளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த கௌசல்யாவின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து அவரது கணவர் ராஜேஷ் இடம் விசாரணை மேற்கொண்ட போது ‘மனைவி எண்ணெயில் வழுக்கி விழுந்து அடிபட்டு உயிரிழந்திருக்கிறார், அப்போது நானும் வீட்டில் இல்லாததால் என்ன நடந்தது என தெரியாது” என்று கூறியுள்ளார்.
ராஜேஷின் பதிலால் அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்ட போது ராஜேஷ் அவரது மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு முன்பு ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற போது ராஜேஷுக்கு அவரது தூரத்து உறவு முறையில் தங்கையான தீபிகா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பேசி பழகி வந்த நிலையில் இவர்களது உறவு முறையையே மறந்து இருவரும் காதலித்து வந்திருக்கின்றனர். ஆனால் இருவரும் அண்ணன் தங்கை உறவு முறை என்பதால் காதலை யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கின்றன.
இந்நிலையில் ராஜேஷுக்கு அவரது பெற்றோர்கள் கௌசல்யாவை திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் தங்களது காதலை தொடர்ந்த ராஜேஷ் மற்றும் தீபிகா, கௌசல்யா கல்லூரிக்கு சென்ற உடன் வீட்டில் தனிமையில் இருப்பதை வழக்கமாக வைந்திருந்துள்ளனர். அப்போது தீபிகா “உன் பொண்டாட்டி இருக்குற வரைக்கும் நம்ம சந்தோஷமா இருக்க முடியாது அவளை கொன்னுடு” என கூறிய நிலையில் அதன் படி கௌசல்யாவை கொலை செய்ய ராஜேஷ் திட்டம் தீட்டி இருக்கிறார். அதன்படி கடந்த (பிப் 07) ஆம் தேதி காலை வேலைக்கு செல்வது போல சென்று பின்னர் யாருக்கும் தெரியாமல் வீடிற்கு சென்ற ராஜேஷ் தனது மனைவி கௌசல்யாவை கழுத்தை நெரித்தும் பின் மண்டையை டைல்ஸில் இடித்தும் கொலை செய்திருக்கிறார். இதனை தொடர்ந்து ராஜேஷ் மற்றும் தீபிகாவை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.