க்ரைம்

பெற்றோருக்கு தெரியாமல் இரண்டாம் கணவருடன் வாழ்ந்த மகள்… கருத்து வேறுபாடால் பிரிந்த குடும்பம்… வாலிபர் நள்ளிரவில் வழிமறித்து கொலை!

நித்தியானந்தத்தை அழைத்து கொண்டு நேற்று முன்தினம் இரவு அசோக்குமார் குடியிருக்கும் வீட்டிற்கு சென்றிருக்கிறார்...

Mahalakshmi Somasundaram

திருவள்ளூர் மாவட்டம், அடுத்த பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதுடைய இந்துமதி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திர பாபு என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி வாழ்ந்து வந்த நிலையில் 13 வயதில் இத்திஷா மற்றும் 8 வயதில் ஜெயவர்த்தினி என்ற இராது பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜேந்திர பாபு கடந்த 2019 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். எனவே இந்துமதி தனது மகள்களுடன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் இந்துமதிக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் வரன் பார்த்து வந்திருக்கின்றனர்.

அப்போது இந்துமதிக்கு புட்லூர் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய அசோக் குமார் என்பவருக்கும் இரண்டாவது திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஆனால் அசோக் குமாரின் நடத்தை சரி இல்லாததை அறிந்த இந்துமதியின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இந்துமதி மகள்களுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் அசோக்குமாரை திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடங்களாக வாழ்ந்து வந்தார். பின்னர் அசோக்குமாரின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்ட நிலையில் இந்துமதி அசோக்குமாரை பிரிந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை குழந்தைகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது பாதியில் வழிமறித்த அசோக்குமார் இந்துமதியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இந்துமதி தனது அத்தை மகனான காக்களூர் பூந்தோட்ட நகரைச் சேர்ந்த 41 வயதுடைய சந்திரபோஸ் என்பவரிடம் தெரிவித்திருக்கிறார். அதனை தொடர்ந்து சந்திரபோஸ் அவரது நண்பரான புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த கார் 38 வயதுடைய டிரைவர் நித்தியானந்தத்தை அழைத்து கொண்டு நேற்று முன்தினம் இரவு அசோக்குமார் குடியிருக்கும் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

அதை தொடர்ந்து இருவரும் அசோக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் மூவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். தகராறு முடிந்து பூங்கா நகர் அப்பாசாமி சாலையில் சந்திரபோஸ் மற்றும் அவரது நண்பர் நித்தியானந்தம் ஆகியோர் காரில் இரவு 11 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது அசோக்குமார் காரை வழி மடக்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இரண்டு பேரையும் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதில் காயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த நித்தியானந்தம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மேலும் இந்துமதியின் அத்தை மகன் சந்திரபோஸ் படுகாயத்துடன் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.