திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகில் ரயில்வே குடியிருப்பு பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் நேற்று மாலை கத்தியால் வெட்டப்பட்டு உடலில் 20 இடங்களில் காயம்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி போலீசார் வெட்டுக் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த வடமாநில இளைஞரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த திருத்தணி போலீசார் வெட்டப்பட்ட வடமாநில இளைஞர் யார்? அவரை வெட்டிய கும்பல் யார் என விசாரணை மேற்கொண்ட நிலையில் காயம் பட்ட அந்த வாலிபர் 34 வயதுடைய சூரஜ் என்பதும் இவர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. ரயிலில் வந்த சூரஜை அதே ரயிலில் வந்த மற்றொரு கும்பலான கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் ரீல்ஸ் மோகத்தில் அவரை வம்பிழுத்து வெட்டியது தெரியவந்துள்ளது.
கஞ்சா போதையில் இருந்த அரிச்சந்திராபுரம் திருவலாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயதுடைய நந்தகோபால், அகர் நகர் அரக்கோணம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய விக்னேஷ், ராணிப்பேட்டை மாவட்டம் சாய் நகர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சந்தோஷ் மற்றும் திருத்தணி நெமிலி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சந்தோஷ் ஆகிய நான்கு சிறுவர்களும் வடமாநில இளைஞர் சூரஜை ரீல்ஸ் மோகத்தில் கத்தியால் வெட்டி அதனை வீடியோ எடுத்து கஞ்சா போதையில் இதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரல் ஆக்கியுள்ளனர்.
அதன் பிறகு திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து அழைத்து வந்து அந்த வட மாநில இளைஞரை ரயில்வே குடியிருப்பு பகுதியில் கடுமையாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து நான்கு வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது கோழி முயற்சி வழக்கு, பொது இடங்களில் மக்களை அச்சுறுத்துதல், உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ரீல்ஸ் மோகத்திலும் கஞ்சா போதையிலும் நான்கு மாணவர்கள் வட மாநில இளைஞரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ரயில்களில் ரயில்வே போலீசார் சீரான முறையில் கண்காணிப்பில் ஈடுபடாததே இதற்கு காரணம் என்றும் ரயில்களில் பட்டா கத்தியுடன் பயணித்த இந்த மாணவர்களை பிடித்திருந்தால் இது போல் சம்பவம் நடந்திருக்காது என்று ரயில் பயணிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதால் ரயில்வே போலீசார் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.