திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜார்ஜ். இவர் அதே கிராமத்தில் ஊராட்சி செயலராக கடந்த 10- ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஊராட்சியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மீது முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து சமீபத்தில் ராமன் கோயில் ஊராட்சிக்கு செயலராக பணி மாற்றம் செய்யப்பட்டார். இவர் மப்பேடு ஊராட்சியில் பணியில் இருந்த போது சுற்றியுள்ள தனியார் தொழிற்சாலைகளின் மேலாளர்களை தனது பிடியில் வைத்துக் கொண்டு அவரது உறவினருக்கு மட்டும் அதில் கிடைக்கும் ஒப்பந்த பணிகளை வழங்கியுள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த முத்தமிழ் செல்வன் என்ற வாலிபர் தன்னிடமிருந்த லோடு வாகனங்களை ஒப்பந்த முறையில் தொழிற்சாலைகளுக்கு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜார்ஜ் செல்வனை கண்டித்து தனது வாகனங்களை வாபஸ் பெறுமாறு கூறியுள்ளார். இதனை மறுத்த செல்வன் ஜார்ஜ் மீது ஆட்சியரிடம் புகாரளித்துள்ளார். எனவே ஜார்ஜ் மப்பேடு பகுதியில் இருந்து ராமர் கோவில் ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தனது பணி மாறுதலுக்கு காரணமாக இருந்தது மற்றும் ஒப்பந்தத்தை பறித்தது உள்ளிட்ட பல்வேறு முன் விரோதத்தால் மப்பேடு கிராமத்தை சேர்ந்த முத்தமிழ்செல்வன் என்பரை நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஜார்ஜ் மற்றும் அவரது உறவினர்களான அரசு பள்ளி ஆசிரியர் வடிவேல், பாலகிருஷ்ணன், கிருபாகரன், விஷால் உள்ளிட்ட 5 நபர்கள் வழிமறித்து வம்பிழுத்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதனை அடுத்து முத்தமிழ்செல்வன் அங்கிருந்து தப்பித்து ஓடிய நிலையில் அவரை விடாமல் விரட்டி சென்று ஓட ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து இடது கை விரல் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த முத்தமிழ்செல்வனை அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதனை அடுத்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி செயலாளர் ஜார்ஜ் உட்பட 5 நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் கிராமத்து வாட்ஸ் அப் குழுவில் இருந்து முத்தமிழ்செல்வனை நீக்கியதால் முத்தமிழ்செல்வன் மற்றும் அவரது தம்பி குலோத்துங்கன் பொங்கல் ஆகியோர் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக விஷால் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முத்தமிழ்செல்வன் மற்றும் அவரது தம்பி குலோத்துங்கன் ஆகிய இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் மப்பேடு காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.