க்ரைம்

“இது என் குழந்தை இல்ல”- கணவன் மற்றும் கள்ளக் காதலனால் கைவிடப்பட்ட பெண்! பிறந்து 20 நாட்களே ஆன 4வது குழந்தையை துடிதுடிக்க கொன்ற தாய்

லட்சுமி, கள்ளக்காதலன் மதிவாணன் வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு வேலூர் அடுக்கம்பாறை..

Muthu Lakshmi

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பிறந்து 20 நாட்களே ஆன பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குழந்தையின் தாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி அருகே படவேடு அடுத்த ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (33). இவரது மனைவி லட்சுமி (26). இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த மதிவாணன் (32) என்பவருடன் லட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது திருமணத்தை மீறிய உறவாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் லட்சுமி நான்காவது முறையாக கர்ப்பமான போது, அந்த கர்ப்பம் தொடர்பாக கணவர் ரமேஷுக்கு சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் விசாரித்ததில் லட்சுமிக்கும் மதிவாணனுக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்தது தெரியவந்ததாகவும், "இந்தக் குழந்தைக்கு நான் தந்தையல்ல" என்று கூறிய ரமேஷ், மனைவி லட்சுமியை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து லட்சுமி, கள்ளக்காதலன் மதிவாணன் வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு, லட்சுமி, மதிவாணன் மற்றும் அவரது தாயார் ஆகியோருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக குழந்தையை யார் வளர்ப்பது என்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை தீவிரமடைந்த நிலையில், ஆத்திரத்தில் லட்சுமி தனது பச்சிளம் பெண் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழந்தை உயிரிழந்த பிறகு, அதன் உடலை ஒரு கட்டைப் பையில் வைத்து ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற லட்சுமி, மதிவாணன் மற்றும் அவரது தாயார் மீது புகார் அளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் குழந்தையின் உடலுடன் ஆரணி, சந்தவாசல், படவேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றியும் திரிந்துள்ளார். இதன் பின்னர், குழந்தையின் உடலை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த லட்சுமி, இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரிடம் 500 ரூபாய் தருவதாகக் கூறி, குழந்தையின் உடலை ஆற்றங்கரையில் புதைக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு சம்மதித்த அந்த நபர், பணத்தை பெற்றுக்கொண்டு குழந்தையின் உடலை ஆற்றுப்பகுதியில் புதைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், "பிறந்த குழந்தை எங்கே?" என்று உறவினர்களும் கிராம மக்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பியபோது, லட்சுமி முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த கிராம மக்கள், சந்தவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் ஜோதி முருகனிடம் இருந்து புகாரைப் பெற்ற போலீசார், லட்சுமியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையை கொன்று ஆற்றில் புதைத்ததை லட்சுமி ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆற்றில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

பிரேதப் பரிசோதனையின் முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, சந்தவாசல் போலீசார் லட்சுமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்தனர். ஆனால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் முன்பு லட்சுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டதால், அவர் தற்போது வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். பிறந்து 20 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கின் அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.