க்ரைம்

நடந்து சென்ற பெண்ணிடம் ரசாயன திரவத்தை வீசி வழிப்பறி... மளிகைக்கடை உரிமையாளர் கைது...

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி பவானி ஆற்று பாலம் அருகே உள்ள வாய்க்கால் கரை அருகே இருசக்கர வாகனத்தை வழிமறித்து பெண்ணிடம் நகை வழிப்பறி செய்து விட்டு  தப்பியோடிய மளிகை கடை உரிமையாளர் சீனிவாசன் என்பரை கோபிசெட்டிபாளையம் போலீசார் கைது செய்தனர்.

Malaimurasu Seithigal TV

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி சேவாக்கவுண்டனூரை சேர்ந்தவர் மினிசாமி மகன் ரகுபதி, கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மஞ்சக்கொல்லை வத்தராயன்தொத்து கிராமத்தை சேர்ந்த  சுகன்யா என்பவருடன் கடந்த செவ்வாய் கிழமை இரவு கள்ளிப்பட்டியில் உள்ள தனது நண்பர்  வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது நஞ்சகவுண்டன் பாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி ஆற்று பாலம் வாய்க்கால் அருகே  வழிமறித்த மர்ம நபர் கத்தியை காண்பித்து மிரட்டி சுகன்யாவிடம் இருந்த ஒரு பவுன் நகையை பறிக்க முயன்றுள்ளார்.

இருவரும் தப்பியோடவே அவர்களை விரட்டி சென்ற மர்ம நபர் ஆசிட் போன்ற ரசாயனத்தை ரகுபதியின் முகத்தில் ஊற்றி உள்ளார். அதில் ரகுபதியின் கன்னம் முழுவதும் எரிச்சல் ஏற்பட்டு காயமானது. ரகுபதி அலறித் துடித்துக் கொண்டிருந்தபோது, அந்த மர்ம நபர் சுகன்யாவின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினான்.

சுகன்யாவின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த ரகுபதி மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கோபிசெட்டி பாளையம் போலீசார்  வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று கோபி இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையிலான போலீசார் நஞ்சகவுண்டன் பாளையத்தில் வாகன சோதனையில் இருந்த போது அந்த வழியாக வந்த ஒரு நபரை நிறுத்தி விசாரணை செய்தனர்.

போலீசார் நடத்திய விசரணையில் சுகன்யாவிடம் நகையை பறித்துச்சென்றது அவர் தான் எனத்தெரிய வந்தது.  விசாரணையில் பிடிபட்ட அந்த நபர் நஞ்சகவுண்டன் பாளையத்தை சேர்ந்த  சீனிவாசன் என்பதும், இவர் சின்னசாமி வீதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருவது தெரிய வந்தது. சீனிவாசன் ஏற்கனவே இதுபோன்ற வழிப்பறி வழக்கில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட சீனிவாசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.