திருநெல்வேலி மாவட்டம், மணிமூர்த்திபுரம் பகுதியில் பெயிண்டர் ஒருவர் பட்டப்பகலில் வழிமறித்து தலை துண்டித்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இதுவரை 9 பேரை தச்சநல்லூர் போலீசார் கைது செய்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மணிமூர்த்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதுடைய பாஸ்கர். பெயிண்டராக வேலை செய்து வந்த இவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். கடந்த (ஆக 30) ஆம் தேதி மாலை பாஸ்கர் தனது இருசக்கர வாகனத்தில் தச்சநல்லூர் பைபாஸ் சாலை வழியாக மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல், திடீரென பாஸ்கரை வழிமறித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை சரமாரியாக தாக்கிய அந்த கும்பல், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி, தலை துண்டாக்கி கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது. சாலையில் ரத்த வெள்ளத்தில் பாஸ்கர் உயிரிழந்து கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணம் என்ன?
சம்பவம் தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக முன்விரோதம், பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், பாஸ்கருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. குறிப்பாக, கடந்த 2023-ஆம் ஆண்டு பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பாஸ்கருக்கும் சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த சம்பவத்தின்போது, பாஸ்கர் தனது உறவினர்களுடன் சேர்ந்து விமல் என்பவரை அரிவாளால் வெட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான பகை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், அதற்கு பழிவாங்கும் வகையில் தற்போது பாஸ்கர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
அடுத்தடுத்து சிக்கிய 9 பேர்
விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், மணிமூர்த்தீஸ்வரம் வாழவந்த அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (24), பொன்ராஜ் (25), பாலையா மகன் மகாராஜன் (28), முருகன் மகன் வினோத் (28), மாயகிருஷ்ணன் என்ற கோபி (40), கட்டுடையார்குடியிருப்பைச் சேர்ந்த மகேந்திரன் என்ற வெள்ளத்துரை (28) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இதையடுத்து நடைபெற்ற தொடர் தேடுதல் வேட்டையில், மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளப்பாண்டியின் மகன்களான மதன் (26), பெருமாள் (25) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட மணிகண்டனின் சகோதரர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அரசு பள்ளி ஆசிரியரும் கைது
இந்த நிலையில், போலீசாரின் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்ற நிலையில், மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய விமல் என்பவரையும் போலீசார் நேற்று (செப் 01) ஆம் தேதி அதிகாலை கைது செய்தனர். விமல் சென்னையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டு பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து விமலை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
அந்த சம்பவத்தில் ஏற்பட்டிருந்த பழைய முன்விரோதம் காரணமாக பாஸ்கர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விமலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் பாஸ்கர் கொலை வழக்கில் இதுவரை மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் கொலைக்கான திட்டம், தாக்குதலில் யார் யார் நேரடியாக ஈடுபட்டனர், கொலைக்குப் பின்னால் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் மணிமூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த கோபி என்ற மற்றொருவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் குற்றவாளிகளின் செல்போன் தொடர்புகள் உள்ளிட்டவற்றையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாக கூறப்படும் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறு காரணமாக ஒருவர் தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.