க்ரைம்

“கீழ் தெரு.. மேல் தெரு.. பிரச்சனை” - வாலிபரை சுத்து போட்டு தாக்கிய இளைஞர்கள்.. சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ!

மதன் குமார் பிரச்சனை வேண்டாம் என்று அவர்கள் செய்வதை பொறுத்துக்கொண்டு அப்பகுதிக்கு செல்லாமல்...

Mahalakshmi Somasundaram

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பெருமாள்பட்டு கிராமத்தில் மேல் தெரு, கீழ் தெரு என இரண்டு தெருக்கள் உள்ளது. இந்த நிலையில் மேல் தெரு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் 19 வயதுடைய மதன்குமார். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கீழ் தெரு பகுதிக்கு சென்று அங்கு தனது நண்பனின் பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளார். அப்போது “அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் “மேல் தெருவில் இருந்து நீ என் இங்கு வந்து கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு இருக்கிறாய்” என கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மதன்குமார் மீது கீழ் தெரு பகுதியை சேர்ந்த வாலிபர்கள் கோபத்தில் இருந்துள்ளனர். மதன் குமாரை எங்கு பார்த்தாலும் தேவையில்லாமல் பேசுவது வம்பிற்கு இழுப்பது என தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் மதன் குமார் பிரச்சனை வேண்டாம் என்று அவர்கள் செய்வதை பொறுத்துக்கொண்டு அப்பகுதிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அந்த வழியாக சென்ற மதன் குமாரை கீழ் தெரு பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியுள்ளது எனவே மதன்குமாரை அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சுத்துப்போட்டு சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் கூட்டத்தில் ஒருவர் மதன் குமாரின் கையை கத்தியால் கிழித்து காயப்படுத்தியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இரு தரப்பினரை விலக்கிவிட்டு காயமடைந்த மதன்குமார் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர். இதுகுறித்து தகவலறிந்த குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து யார் மதன்குமாரை கத்தியால் தாக்கியது? முன் பகைக்கான முழு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மதன்குமாரை தாக்கியதை எதிர் தரப்பு வாலிபர்கள் வீடியோ எடுத்து வைத்திருந்த நிலையில் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து யார் வீடியோ வெளியிட்டது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.