திருப்பதியில் தாய் இறந்த துக்கத்தில் இருந்த மாற்றுத்திறனாளி இளைஞர், மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயதுடைய லட்சுமண் ராவ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சியாமளா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் மாற்றுத்திறனாளிகள். திருமணத்திற்குப் பிறகு திருப்பதியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு லட்சுமண் ராவின் தாய் திடீரென உயிரிழந்துள்ளார். தாய் மீது அதிக பாசம் கொண்டிருந்த லட்சுமண் ராவ், அவரது மரணத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தனது மனைவியிடம், “அம்மா அடிக்கடி என் கனவில் வந்து தன்னுடன் வருமாறு அழைக்கிறார்” என கூறி வேதனையடைந்து வந்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில், தானும் மனைவியும் தற்கொலை செய்து கொண்டு தாயிடம் சென்றுவிடலாம் என லட்சுமண் ராவ் கூறியுள்ளார்.
ஆனால், இதற்கு சியாமளா சம்மதிக்காமல் அவரை தடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று கணவன் - மனைவி வசித்து வந்த வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது லட்சுமண் ராவ் மற்றும் சியாமளா ஆகிய இருவரும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து இருவரது உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் லட்சுமண் ராவின் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த செல்ஃபி வீடியோ ஒன்று போலீசாரின் கவனத்திற்கு வந்துள்ளது. அந்த வீடியோவில், தாயின் மரணத்தை தாங்க முடியாமல் மன உளைச்சலில் இருந்ததாகவும், தற்கொலைக்கு மனைவி சம்மதிக்காததால் அவரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் லட்சுமண் ராவ் பேசியிருந்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் போலீசார் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயின் மரணத்தால் ஏற்பட்ட துயரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பதி பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்