Tirupattur Woman Geetha Death Case 
க்ரைம்

“கணவர் இல்லாத நேரத்தில் உறவினருடன் கள்ளக்காதல்” - வீடு புகுந்து தாக்கிய காதலனின் மனைவி.. குழந்தைகள் கண்முன்னே தாய் விபரீத முடிவு!

நாளடைவில் இருவருக்கும் இடையேயான பழக்கம் தகாத உறவாக மாறியதாகவும் கூறப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

கிருஷ்ணகிரி மாவட்டம் இளவம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகள் 27 வயதுடைய கீதா. இவருக்கும் திருப்பத்தூர் மாவட்டம் சிம்மணபுதூர் சின்ன வட்டம் பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான மூன்று மாதங்களில் ரவிசங்கருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது கீதாவிற்கு தெரியவந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது கீதா மற்றும் ரவிசங்கர் தம்பதிக்கு 5 வயதில் பெண் குழந்தையும், 4 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். ரவிசங்கர் கோயம்புத்தூரில் வேலை செய்து வருவதால், கீதா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே சொந்த ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்த்துச் செல்வதை ரவிசங்கர் வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், ரவிசங்கரின் உறவினரான ராஜூவ்குமார் என்பவர் கீதாவுடன் நெருங்கிப் பழகி வந்ததாகவும், நாளடைவில் இருவருக்கும் இடையேயான பழக்கம் தகாத உறவாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் ரவிசங்கருக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து, கடந்த நான்கு மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, தனது மனைவி கீதா மற்றும் ராஜூவ்குமார் ஆகிய இருவரையும் நேரில் அழைத்துப் பேச வேண்டும் எனக் கூறி, ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் ரவிசங்கர் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, கீதாவுக்கும் ராஜூவ்குமாருக்கும் இடையேயான பழக்கம் குறித்து ராஜீவின் மனைவி மற்றும் தாய்க்குத் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், கீதாவின் வீட்டிற்குச் சென்று தகாத வார்த்தைகளால் பேசியதுடன், அவரைத் தாக்கி, மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் இரண்டு குழந்தைகளின் கண் முன்னே நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கீதா, நேற்று (நவ 13) வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கீதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கீதாவுக்குத் திருமணமாகி ஆறு ஆண்டுகளே ஆன நிலையில், அவரது மரணம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, பொறுப்பு கோட்டாட்சியர் தணிகாசலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். விசாரணையை முடித்துவிட்டு கோட்டாட்சியர் வெளியே வந்தபோது, அங்கு வந்த கீதாவின் பெற்றோர், தங்களது மகளை அடித்து கொலை செய்து தூக்கில் மாட்டி இருக்கின்றனர் எனவும், கீதாவின் மரணத்திற்குக் காரணமான ராஜூவ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், கோட்டாட்சியரின் வாகனத்திற்கு முன்பாக நின்று கதறி அழுது தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.

Tirupattur Woman Geetha Death Case

அப்போது கீதாவின் 5 வயது மகளும், தனது தாயை வீட்டிற்குள் புகுந்து ராஜூவ்குமார் குடும்பத்தினர் தாக்கியதாகவும், தனது தாயிடம் இருந்த செல்போனைப் பறித்துச் சென்றதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. குடும்பப் பிரச்சினை மற்றும் தாக்குதல் தொடர்பான புகார்களுக்கு மத்தியில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீதாவின் மரணம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.