Debra Lafave case 
க்ரைம்

"வகுப்பறை முதல் கார் வரை.. மாணவனுடன் உடலுறவில் இருந்த ஆசிரியர்!" அழகாக இருப்பதால் சிறை தண்டனையில் இருந்து எஸ்கேப்பா?

ஒரு "அழகான இளம் பெண்ணை" சிறையில் அடைப்பது என்பது "பச்சை இறைச்சித் துண்டை சிங்கங்களுடன் போடுவதற்கு" ஒப்பானது

Vinvizhi Leninton

14 வயது மாணவனுடன் பாலியல் உறவு கொண்டதற்காக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவர் மிகவும் அழகாக இருக்கும் ஒரே காரணத்திற்காக சிறைத் தண்டனையிலிருந்து தப்பித்து, 20 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

டெம்பிள் டெரஸில் உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார் டெப்ரா லஃபேவ். 2004-ம் ஆண்டில், லஃபேவ் தனது அப்போதைய கணவர் ஓவனைப் புதிதாகத் திருமணம் செய்திருந்தபோது, ​​அவருக்கு வயது வெறும் 24 தான். அந்த சமயத்தில்தான் அவர் 14 வயது மாணவர் ஒருவருடன் பாலியல் உறவைத் தொடங்கியுள்ளார். அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர் அந்தச் சிறுவனுடன் தனது வகுப்பறையிலும், தன் கணவருடன் வசித்து வந்த வீட்டிலும், தனது எஸ்யூவி காரின் பின்புறத்திலும் உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் அந்த 14 வயது சிறுவனின் குடும்பத்தினர் இந்த விவகாரம் குறித்து அறிந்த பின்னர் காவல்துறையினரிடம் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து, காவல்துறையினர் லஃபேவிற்கும் அந்தச் சிறுவனுக்கும் இடையேயான உரையாடல்களைப் பதிவு செய்யத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து, 2004 ஜூன் மாதம் லஃபேவ் ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

லஃபேவ் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, லஃபேவின் வழக்கறிஞர் நீதிபதியிடம், “லஃபேவ்வை புளோரிடா மாநிலப் பெண்கள் சிறைச்சாலையில் ஒரு அழகான இளம் பெண்ணை அடைப்பது என்பது இறைச்சித் துண்டை சிங்கங்களுக்கு போடுவதைப் போன்றது” என்று சர்ச்சைக்குரிய வகையில் ஒரு உவமை ஒன்றினை குறிப்பிட்டு பேசினார். இந்த கூற்றானது இந்த வழக்கை மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாற்றியது.

நீதிபதியும் அவரது கூற்றை ஏற்றுக்கொண்டதைப்போல, லஃபேவுக்கு மூன்று ஆண்டுகள் வீட்டுக் காவலும், ஏழு ஆண்டுகள் நன்னடத்தையும் விதிக்கப்பட்டதுடன், அவர் ஒரு பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவினை பிறப்பித்தார்.

தற்போது, ​​இருபது ஆண்டுகள் கழிந்த நிலையில், லஃபேவ் தனது கடந்த காலத்தை மாற்ற முயன்றிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. தற்போது 45 வயதான அவர், தனது பெயரை மாற்றிக்கொண்டும், மத நம்பிக்கையை நாடியிருப்பதாகவும் அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லஃபேவ் சமூக ஊடகங்களில் இருந்து விலகி, நேர்காணல்கள் கொடுப்பதை தவிர்த்து, ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், லஃபேவ் தற்போது 'டெப்ரா ஜீன் வில்லியம்ஸ்' என்ற பெயரில் பரவலாக அறியப்படுகிறார். அவர் புளோரிடாவின் ரஸ்கினில் உள்ள, தனது பெற்றோருக்குச் சொந்தமான 400,000 டாலர் மதிப்புள்ள வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வீடானது, அவர் முன்பு ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளியிலிருந்து சுமார் 20 மைல் தொலைவில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. லஃபேவ் பதிவுசெய்யப்பட்ட பாலியல் குற்றவாளி என்பதால், அவர் எந்த ஒரு பள்ளிகளிலிருந்தும் 1,000 அடி தூரத்திற்குள் வசிக்க அனுமதிமறுக்கப்பட்டுள்ளதாக ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால், தற்போது லஃபேவ் தனது மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு புதிய கணவருடன் அந்த வீட்டில்தான் வசித்து வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2004-ல் லஃபேவ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது கணவரான ஓவன் லஃபேவ் தன் மனைவிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். 2009-ல், தனது முன்னாள் மனைவிக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், "அவர் ஒரு ஆணாக இருந்திருந்தால் கட்டாயம் தண்டனை கிடைத்திருக்கும்" என்று லஃபேவ்வின் முன்னாள் கணவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வுகளுக்கு பின்னர், 2011-ல் அந்த முன்னாள் ஆசிரியை ஒரு உணவக உரிமையாளருடன் உறவில் இருந்துள்ளார். மேலும், அந்த தம்பதியினருக்கு இரட்டை ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளது. இருப்பினும், அந்த உறவு நீண்ட நாள் நீடிக்கவில்லை. 2016-ல் அந்தக் குழந்தைகளின் காப்பாளர் உரிமை தொடர்பாக அந்தத் தம்பதியினர் தகராறில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

இந்த நிகழ்வுகளுக்கு பின்னர், லஃபேவ்விற்கு பெண் குழந்தை, 2019-ல் பிறந்தது. லஃபேவ்வின் தற்போதைய கணவர் பொதுவெளியில் மிக அரிதாகவே தென்படுவதாகவும், அவர்கள் எப்போது திருமணம் செய்துகொண்டார்கள் என்பதை உறுதிப்படுத்தும் பொதுப் பதிவுகள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. தனது ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து, சிறார்களுடன் தொடர்பு கொள்ள அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், அவ்வாறு தொடர்பு கொள்ளாத பல வேலைகளை லஃபேவ் செய்து வந்ததாக அவரது சுற்றத்தார் கூறுகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், லஃபேவ் தனக்குத் தேவையான பாலியல் குற்றவாளி சிகிச்சை, சமூக சேவை ஆகியவற்றை முடித்து, நீதிமன்றக் கட்டணமாக $13,000-க்கும் அதிகமான தொகையை செலுத்தியுள்ளார். மேலும், அவரது அண்டை வீட்டார் "அவர் என்ன செய்தார் என்பது எங்களுக்கு வேண்டியதில்லை, அது அவரின் கடந்த காலம். தற்போது அவர் பழகுவதற்கு இனிமையானவராகவும், நல்லவராகவும் எங்களிடம் இருக்கிறார்", என்று கூறியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்