Trichy Woman Skeleton Case 
க்ரைம்

“இரவோடு இரவாக பெண் நரபலியா?” - மண்டை ஓடு இல்லாமல் மீட்கப்பட்ட எலும்புக்கூடு.. சுடுகாட்டில் இருந்த சிவப்பு புடவை!

தலைப்பகுதி இருந்த இடத்தின் அருகே எரிந்த நிலையில் சிறிய பாசிமாலை, சிவப்பு நிறச் சேலை..

Mahalakshmi Somasundaram

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கிராம சுடுகாட்டில், மனித உடல் முழுவதுமாக எரிக்கப்பட்டு எலும்புகள் மட்டுமே எஞ்சியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைப்பற்றப்பட்ட எலும்புகள் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்ணுடையதாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், இது கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே, சம்பவ இடத்தில் எலுமிச்சம் பழங்கள் நான்கு திசைகளிலும் வைக்கப்பட்டிருந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்துக்கு உட்பட்ட திருப்பைஞ்ஞீலி ஊராட்சியின் வாழ்மால்பாளையம் கீழூர் கிராம சுடுகாட்டில், கடந்த (அக் 7) ஆம் தேதி காலை மனித உடல் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாகப் பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மண்ணச்சநல்லூர் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உடல் முழுவதுமாக எரிந்த நிலையில், மண்டை ஓடு இல்லாமல் எலும்புகள் மட்டுமே எஞ்சியிருந்தது தெரியவந்தது. மேலும், தலைப்பகுதி இருந்த இடத்தின் அருகே எரிந்த நிலையில் சிறிய பாசிமாலை, சிவப்பு நிறச் சேலைத் துண்டுகள் மற்றும் புதிய பச்சை நிற மண்பானை ஆகியவை கிடந்ததாகக் கூறப்படுகிறது.

அப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லாததால், இது கொலைச் சம்பவமாக இருக்குமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். சம்பவ இடத்துக்கு வந்த தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு, எரிந்த நிலையில் கிடந்த எலும்புகள், பாசிமாலை, ஐந்து ஜாக்கெட் கொக்கிகள், ஒரு தோடு மற்றும் பற்கள் உள்ளிட்ட தடயங்களைக் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட எலும்புகளை ஆய்வு செய்த திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அவை 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்ணுடையதாக இருக்கலாம் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி குழந்தை பிறந்திருக்கலாம் என்பதற்கான தடயங்களும் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உடல் முழுவதும் எரிக்கப்பட்டு எலும்புகள் சாம்பலாகும் அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளதால், டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கைப்பற்றப்பட்ட பற்கள் டிஎன்ஏ பரிசோதனைக்காகத் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட உள்ளன. அதன் மூலம் உயிரிழந்தவர் யார் என்பதை அடையாளம் காண போலீசார் முயன்று வருகின்றனர்.

Trichy Woman Skeleton Case

கடந்த 8ஆம் தேதி திருச்சி சரக டிஐஜி எம்.ஆர். சிபி சக்ரவர்த்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த வழக்கில் துப்பு துலக்க, ஜீயபுரம் டிஎஸ்பி சங்கர் தலைமையில் மூன்று காவல் ஆய்வாளர்கள், மூன்று உதவி ஆய்வாளர்கள் மற்றும் 12 காவலர்கள் அடங்கிய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படையினர் மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்ஞீலி, வாழ்மால்பாளையம், சிறுகாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் மட்டுமின்றி, சுற்றுவட்டார மாவட்டங்களில் காணாமல் போன பெண்கள் குறித்த புகார்கள் மற்றும் கணவன்-மனைவி இடையிலான தகராறு தொடர்பான வழக்குகள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதன் மூலம் எலும்புக்கூடாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தையும், சம்பவத்தின் பின்னணியையும் கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, சம்பவ இடத்தில் நேற்று முன்தினம் (அக் 12) காலை இரண்டு எலுமிச்சம்பழங்கள் அறுக்கப்பட்டு, நான்கு திசைகளிலும் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே எரிந்த நிலையில் பெண்ணின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தால் அச்சமடைந்திருந்த பொதுமக்களிடையே, இந்தச் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த எலுமிச்சம்பழங்கள் யாரால் வைக்கப்பட்டன, போலீசாரின் விசாரணையைத் திசைதிருப்பும் நோக்கில் அவை வைக்கப்பட்டனவா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நரபலி தொடர்பான சந்தேகமும் எழுந்துள்ள நிலையில், அதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சுடுகாட்டில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் யாருடையவை, அந்தப் பெண் எவ்வாறு உயிரிழந்தார், உடல் எரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை காண மூன்று தனிப்படைகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்தச் சம்பவம் வாழ்மால்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்