தேனி மாவட்டம் கம்பம் உலகத் தேவர் தெருவைச் சேர்ந்தவர் கவுதமன் (24), இவருக்கும், இதே ஊரைச் சேர்ந்த புவனேஸ்வரிக்கும் (21) நவ.10-ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் டிச.8-ம் தேதி புவனேஸ்வரி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் போலீஸார் விசாரணை செய்தனர். இது குறித்து போலீஸார் கூறியதாவது:
கட்டாயத் திருமணம் செய்ததால் கவுதமனுடன் வாழ விருப்பம் இல்லாமல் புவனேஸ்வரி இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து கூலிப்படை மூலம் கவுதமனை கொலை செய்ய ஏற்பாடு செய்தார். அவர்கள் கூடலூர் தொட்டிப்பாலம் அருகே காரை மோதி கவுதமனை கொலை செய்ய முயன்றனர். ஆனால் அவர் தப்பிவிட்டார். விஷயம் வெளியே தெரிந்து விட்டதால் புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார் என்றனர்.
கவுதமனை கொலை செய்ய முயன்ற நிரஞ்சன்ராஜா (36) பிரதீப் (35), மனோஜ்குமார் (20), ஆல்பர்ட் (34), ஜெயசத்யா (18) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ஜெட்லி என்பவரை தேடி வருகின்றனர்.