நேற்று திருச்செந்தூரில் நகைக்காக இரண்டரை வயது குழந்தை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் குமாரபுரத்தை சேர்ந்த பெரியசாமி இவர் வெல்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும் ஆதிரா என்ற இரண்டரை வயது பெண் குழந்தையும் உள்ளது.
நேற்று முன்தினம் (மே 08) காலை வழக்கம்போல் பெரியசாமி வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் பார்வதி குழந்தை ஆதிராவோடு தூங்கிக்கொண்டிருந்தார், அப்போது திடீரென பார்வதி அலறி கத்தியுள்ளார். பார்வதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தபோது அங்கு குழந்தை ஆதிரா இறந்து கிடந்துள்ளார்.குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய அக்கம்பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து போலீசில் தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பார்வதியிடம் விசாரணை மேற்கொண்டதில் பார்வதி “வீட்டின் சுவர் ஏரி குதித்து வந்த மர்ம நபர் எனது கழுத்தில் இருந்த தங்கத் தாலியை கேட்டு குழந்தை முகத்தில் துணியை வைத்து அமுக்கினார் .
இதனால் பதறி தாலியை உடனே கழற்றி கொடுத்து விட்டேன். அப்போது குழந்தை மயங்கியதும் மர்ம நபர் குழந்தையையும் தாலியையும் கீழே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த குழந்தையை பார்த்ததும் நான் அலறித்துடித்தேன் . என் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் குழந்தை மீட்டு திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த போது குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்தார்” என கூறியுள்ளார்.
இதனை அடுத்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் முதுகலை பட்டப்படிப்பு முடித்த பார்வதிக்கு படிக்காத பெரியசாமியை அவர்களது வீட்டில் திருமணம் செய்து வைத்துள்ளனர். எனவே இதன் காரணமாக பார்வதிக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் விரக்தியடைந்த பார்வதி மனநலம் பாதிக்கப்பட்டு, கடந்த ஒன்றரை வருடமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்நிலையில் குழந்தையும் பார்வதியும் வீட்டில் தனியாக இருந்தபோது குழந்தையை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் பார்வதி குழந்தையின் கழுத்தை நெரித்துள்ளார். குழந்தை துடிக்கவே முயற்சியை பார்வதி கைவிட்டுள்ளார். ஆனாலும் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுள்ளது, என தெரியவந்துள்ளது. போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் நமது செய்தியாளர் இதனை தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்