தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முக்கனி குருவித்துறை பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் இவருக்கு பொங்கல் ராஜ்,சிவகுமார், மற்றும் நாராயணன் என்ற மூன்று மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் மூவரும் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள புலமாடசாமி சாஸ்தா கோவிலில் பொறுப்பில் இருந்துள்ளனர்.
நிர்வாகியாக இருக்கும் சிவகுமாரும் பூசாரியாக இருக்கும் நாராயணனும் முத்தையா புரத்தில் வசித்து வந்ததால், அதே ஊரில் இருக்கும் தர்மகர்த்தா பதவியில் இருந்த பொங்கல் ராஜ் அனைத்தையும் நிர்வகித்து வந்துள்ளார்.
இந்நிலையில் “கோவில் வளாக சுவருக்கு அருகில் தனது முன்னோர்களின் சமாதி உள்ளது. என்றும் இந்த கோவிலுக்கு நான்கு தலைமுறைகளாக, நாங்களே பூஜை செய்து வருகிறோம் எனவே இந்த கோவில் எங்களுக்கே சொந்தம்” என்று நாராயணன் சொல்லிக்கொண்டு இருந்துள்ளார்.
கடந்தாண்டு புரட்டாசி மாதம் கோயில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. விழா முடிந்ததும் அதே ஊரை சேர்ந்த மசாணமுத்து தரப்பினர் மற்றும் வரி செலுத்தும் பிற குடும்பத்தினர் பொங்கல் ராஜ் தரப்பினரிடம் கோவிலின் கணக்கு வழக்குகளை கேட்டுள்ளனர்.அதற்கு நாராயணன் “ புலமாடசாமி கோவில் எங்களுக்கு சொந்தமானது அதனால் யாருக்கும் கணக்கு வழக்கு சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என தெரிவித்துள்ளார்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் கோவிலில் பூஜை செய்யும் பொறுப்பை பொங்கல்ராஜ் தரப்பினருக்கே வழங்கியுள்ளது. இதனால் கோபமடைந்த மசாண முத்து தரப்பினரான மசாண முத்துவின் மகன் புலமாட முத்து, மாரிமுத்து மகன் நாகராஜன், மற்றும் சங்கர் மகன் ஜெயராஜ் ஆகிய மூணு பேரும் சேர்ந்து பொங்கல்ராஜாவை நேற்று இரவு தலையில் கல்லைப்போட்டு கொன்றுள்ளனர்.
இரவு நேரமாகியும் பொங்கல் ராஜா வீட்டிற்கு வராததால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர் இரவு முழுவதும் பொங்கல் ராஜை தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் பொங்கல் ராஜாவின் மகன் சக்திவேல் “எனது தந்தை இரவு வீட்டிற்கு வரவில்லை எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவே கண்டுபிடித்து கொடுங்கள்” என காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இச்சமயத்தில் மதிக்கட்டான் பாலத்தின் கீழ் ஒரு வண்டி கிடப்பதாகவும், அதற்கு அருகில் ரத்தக்கறை இருப்பதாகவும், போலீசுக்கு தகவல் கிடைத்தது சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தேடுதல் பணியை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த ஓடையில் பொங்கல் ராஜ் தலையில் கல்லால் தாக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையின் அடிப்படையில் புலமாடசாமி,நாகராஜ் மற்றும் ஜெயராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்