க்ரைம்

“ஆண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க மாட்டீங்களா..?” - சிங்கப்பெண் போலீசிடம் ரகளை செய்த தவெக வக்கீல்! டூவீலரில் ஏறி அட்டகாசம்?

மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், அவர்களை பணி செய்யவிடாமல் தொந்தரவு செய்ததும்..

Muthu Lakshmi

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தெளிசாத்தநல்லுரை சேர்ந்தவர் தமிழக வெற்றி கழக வழக்கறிஞர் வினோத்மிஷ்ரா (26). இவர் நேற்று இரவு பரமக்குடி பேருந்து நிலையம் புறக்காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிங்கப்பெண் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் சிங்கப்பெண் படையில், பணியில் இருந்த டூவீலரில் ஏறி “எனது வீட்டில் இறக்கி விடுங்கள்” என மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதையடுத்து, “பெண்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பு கொடுப்பீர்களா?  ஆண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க மாட்டீர்களா? என்று கேட்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சிங்கப் பெண் போலீசார் உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து எஸ் ஐ சண்முகப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் தமிழக வெற்றி கழக வழக்கறிஞர் வினோத் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். ஜூலை 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து தவெக நிர்வாகியும், வழக்கறிஞருமான வினோத் மிஷ்ராவை ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.

அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களை தடுக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு சார்பில் கடந்த மாதம் 9-ம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை விரைவாக கண்டறிந்து தடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி உதவி மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்கும் இந்த சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டது. மேலும் மாநிலம் முழுவதும் பெண்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆளும் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொது இடத்தில் பணியில் ஈடுபட்டுள்ள பெண் போலீசாரிடம், மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், அவர்களை பணி செய்யவிடாமல் தொந்தரவு செய்ததும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்களுக்கு பாதுகாப்பு தர மாட்டீங்களா? என சிங்கப் பெண் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டதும், பணியில் இருக்கும் அரசு வாகனத்தை தனது சொந்த பயன்பாட்டிற்கு கேட்டதும் அராஜக செயல் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.