Woman harassment case 
க்ரைம்

“என்னை மதிக்காமல்.. மாவட்ட செயலாளரை பார்க்க போனியா?” - ஆபாச வார்த்தைகளால் பெண்ணிடம்.. எல்லை மீறிய தவெக நகர செயலாளர்!

"விளாத்திகுளம் நகர செயலாளர் நான் இருக்கிறேன், என்னை மதிக்காமல் நீ எப்படி மாவட்ட செயலாளரை பார்க்க போச்சு?, விளாத்திகுள நகரத்தில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் நீ என்னிடம் தான் கேட்க வேண்டும்"

Vinvizhi Leninton

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர்நகர் பகுதியை சேர்ந்த ராஜபாண்டியன் என்பவரின் மனைவி தனலட்சுமி (37). இவர் தமிழக வெற்றி கழகம் கட்சி ஆரம்பித்த நாள் முதல் தற்போது வரை கட்சியில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காமராஜர் நகர் பகுதியில், மாற்றுக்கட்சியில் இருந்து தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைந்த பெண் ஒருவருக்கு, வருகின்ற பேரூராட்சி மன்ற தேர்தலுக்கான 'வார்டு கவுன்சிலர் சீட்' வேண்டுமென்று, மாவட்டச் செயலாளரான மகேஸ்வரனிடம், தனலட்சுமி அப்பெண்ணை அறிமுகப்படுத்தி "வார்டு கவுன்சிலர் சீட் வேண்டும்" என்று கேட்டுள்ளார்.

இந்த விஷயம் விளாத்திகுளம் பேரூராட்சி நகர செயலாளரான முத்துராமலிங்கசேதுபதிக்கு தெரிய வந்த நிலையில் பெரிய பிரச்சனையாகியுள்ளது. கடந்த 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இரவு முத்துராமலிங்கசேதுபதி செல்போனில் தனலட்சுமியைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் அவர், "விளாத்திகுளம் நகர செயலாளர் நான் இருக்கிறேன், என்னை மதிக்காமல் நீ எப்படி மாவட்ட செயலாளரை பார்க்க போச்சு?, விளாத்திகுள நகரத்தில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் நீ என்னிடம் தான் கேட்க வேண்டும்" என கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது நடந்த பின்னர், முத்துராமலிங்கசேதுபதியும் அவரது மனைவியும் தனலட்சுமி வீட்டுக்கே சென்று மீண்டும் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். தனலட்சுமியை ஆபாச வார்த்தைகளால் திட்டி, செருப்பை எடுத்து தனலட்சுமி முகத்தின் மீது எரிந்து, முத்துராமலிங்க சேதுபதியின் மனைவி சௌந்தர்யா, வாசலில் கிடந்த விளக்கமாறை எடுத்து தனலட்சுமி மீது வீசி, அவரை கீழே தள்ளிவிட்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து தனலட்சுமியின் சத்தம் கேட்டு அவரது கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவ்விடத்திற்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் நடைபெற்ற கலவரத்தை விளக்கி விட்டுள்ளனர். இதனையடுத்து, பொது இடத்தில் தன்னை அடித்து அசிங்கப்படுத்தி, ஆபாசமாக திட்டி மன உளைச்சலை ஏற்படுத்திய முத்துராமலிங்கசேதுபதி மீது விளாத்திகுளம் காவல் நிலையத்தில் தனலட்சுமி புகார் அளித்துள்ளார்.

புகார் மனுவை பெற்றுக்கொண்ட விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், புகார் மனு மீது 03-10-2026 சனிக்கிழமை இரவு வரை எந்த நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தனலட்சுமியை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சனிக்கிழமை இரவு விளாத்திகுளம் தமிழக வெற்றிக் கழக நகரசெயலாளர் முத்துராமலிங்கசேதுபதி மீது பெண்கள் துன்புறுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள முத்துராமலிங்க சேதுபதியை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும், கடந்த வாரம் எட்டையாபுரம் நகர செயலாளர் கனகராஜ் அவரது சகோதரர் கார்த்திக் ஆகியோர் அரிவாளுடன் ஒரு இளம் பெண்ணின் குடும்பத்தாருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் அடங்குவதற்குள் விளாத்திகுளம் நகர செயலாளர் தனது கட்சியை சார்ந்த பெண் நிர்வாகி வீட்டிற்க்கே சென்று அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்