உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் கௌரவக் கொலை என்ற பெயரில் 27 வயது முஸ்லிம் இளைஞரும், 22 வயது இந்து இளம்பெண்ணும் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரக் கொலையை அந்தப் பெண்ணின் சகோதரர்களே செய்ததாகக் கூறப்படுகிறது.
சவூதி அரேபியாவில் வேலை செய்து வந்த அர்மான் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு மொராதாபாத் திரும்பியுள்ளார். அப்போது அவருக்கும் காஜல் என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களது காதலுக்கு காஜலின் சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், காதலைக் கைவிடுமாறும் எச்சரித்துள்ளனர்.
சுமார் மூன்று நாட்களுக்கு முன்பு அர்மானும் காஜலும் திடீரென மாயமானார்கள். அர்மானின் தந்தை ஹனீப் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தியபோது, காஜலும் காணாமல் போனது தெரியவந்தது. இதில் சந்தேகமடைந்த போலீஸார் காஜலின் சகோதரர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் இருவரும் தங்களது காதலர்களைக் கொன்றதை ஒப்புக்கொண்டனர். மேலும், உடல்களைப் புதைத்த இடத்தையும் அவர்கள் போலீஸாருக்குக் காட்டினர்.
"பெண்ணின் சகோதரர்கள் இருவரையும் கொன்றதை விசாரணையில் கண்டுபிடித்தோம். அவர்கள் ஒப்புக்கொண்ட பிறகு உடல்களை மீட்டோம். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டியையும் கைப்பற்றியுள்ளோம்" என்று மொராதாபாத் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சத்பால் அண்டில் தெரிவித்தார்.
பெண்ணின் மூன்று சகோதரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் வகுப்புவாத வன்முறைகள் வெடிக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையில், அர்மானுக்கும் காஜலுக்கும் இடையே காதல் இருந்த விஷயம் தங்களுக்குத் தெரியாது என்று அர்மானின் சகோதரி கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.