Vanagaram Secret Camera 
க்ரைம்

“ சுவிட்ச் பாக்ஸில் இருந்த ரகசிய கேமரா” - வாடகை வீட்டில் தங்கிய பெண்களுக்கு அதிர்ச்சி.. செல்போனில் சிக்கிய அந்தரங்க வீடியோ!

ரகசிய கண்காணிப்பு கேமராவை சரவணன் பொருத்தியிருந்ததாகவும், அதனை தனது செல்போனுடன் இணைத்து வைத்திருந்ததாகவும்...

Mahalakshmi Somasundaram

சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வரும் நிலையில் வெளியூரில் இருந்து வரும் பெண்களுக்கு நிறுவனத்தின் சார்பில் வீடு வாடகைக்கு எடுத்து தருவது வழக்கம். அது போல மூன்று பெண்கள், நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாடகை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்த நிலையில், பெண்கள் வீட்டை விட்டு வேலைக்கு செல்லும் போது, திரும்பி வரும்போது, வீட்டின் உரிமையாளரின் மகன் 27 வயதுடைய சரவணன் அவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் சந்தேகமடைந்த பெண்கள், வீட்டின் அறைகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சோதனை செய்துள்ளனர். அப்போது வீட்டில் உள்ள மின்சார சுவிட்ச் பாக்சில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அந்த கேமரா மூலம் பதிவாகும் காட்சிகளை சரவணன் தனது செல்போனில் இணைத்து கண்காணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து மூன்று பெண்களும் வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வீட்டை வாடகைக்கு விடும்போதே சுவிட்ச் பாக்சுக்குள் ரகசிய கண்காணிப்பு கேமராவை சரவணன் பொருத்தியிருந்ததாகவும், அதனை தனது செல்போனுடன் இணைத்து வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சரவணனை போலீசார் கைது செய்ததுடன், அவரது செல்போன் மற்றும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவையும் பறிமுதல் செய்தனர். மேலும், சரவணன் மீது பாரதிய நியாய சன்ஹிதா, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சரவணனை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி அவரை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இவர் பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மற்றவருக்கு பகிர்ந்து இருக்கிறார் என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. பெண்கள் தங்கியிருந்த வாடகை வீட்டில் சுவிட்ச் பாக்சுக்குள் ரகசிய கேமரா பொருத்தி கண்காணித்ததாக இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் வானகரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்