Vellore Odugathur Youth Clash 
க்ரைம்

“ஆபாசமாக பேசி தாக்கப்பட்ட பெண்கள்” - கஞ்சா போதையில் வாலிபர்கள் ஊருக்குள் சென்று அட்டகாசம்.. நடவடிக்கை எடுக்காத போலீஸ்?

தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் அவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே இரு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இடையே நீண்டகாலமாக இருந்து வரும் முன்விரோதம், தற்போது பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு சென்றுள்ளதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டா கத்தியுடன் சில இளைஞர்கள் கிராமத்திற்குள் சென்று ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஒடுகத்தூர் அருகே உள்ள ஓங்கபாடி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் மருத்துவம், கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக அருகில் உள்ள தாங்கல் பகுதிக்கு சென்று அங்கிருந்து பிற இடங்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.

ஓங்கபாடி மற்றும் தாங்கல் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இடையே மாடு விடுவது, காதல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது தகராறுகள் ஏற்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஓங்கபாடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது உறவினரின் பெண்ணை பேருந்தில் ஏற்றி விடுவதற்காக நேற்று(அக் 06) முன்தினம் தாங்கல் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் அவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Vellore Odugathur Youth Clash

தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று மாலை தாங்கல் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஓங்கபாடி கிராமத்திற்குள் சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் சம்பந்தப்பட்ட இளைஞரின் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டதுடன், அவரது இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ஓங்கபாடி பகுதி பெண்கள் சிலர் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது, அந்த இளைஞர்கள் கத்தியை காட்டி பெண்களிடம் ஆபாசமாக பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், பெண்களை தாக்க முயன்றதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார், ஓங்கபாடி கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், டிஎஸ்பி நந்தகுமார் நேற்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் இளைஞர்கள் மீது இதுவரை கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். வேப்பங்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாகவும், இதனை கண்காணிக்க வேண்டிய காவல்துறையின் தனிப்பிரிவு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்