Veppur Murder Case 
க்ரைம்

“கணவனை கொன்று அப்டேட் செய்த கள்ளக்காதலன்” - இரவு முழுவதும் சடலத்துடன் கார் டிரைவ் .. 12 நாட்களுக்கு பிறகு வெளியான உண்மை!

தனது மனைவியுடன் ஏன் தொடர்பில் இருக்கிறாய் என இளையராஜா, வெங்கடேசனிடம் கேட்டதாகவும்...

Mahalakshmi Somasundaram

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 39 வயதுடைய இளையராஜா. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒரங்கூர் முகம் செயலாளராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பாட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய அஸ்வினிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இளையராஜா (ஆக 12) ஆம் தேதி கிராமத்தின் அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையின்போது, இளையராஜாவின் மனைவி அஸ்வினிதா போலீசாரின் விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரது செல்போன் தொடர்புகள் மற்றும் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, இளையராஜாவின் சித்தி மகனான பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசனுக்கும், அஸ்வினிதாவுக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த வெங்கடேசனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

சம்பவத்தன்று இளையராஜாவும் வெங்கடேசனும் கீழக்கல்பூண்டி கிராமத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் மது வாங்கி விட்டு பின்னர் அருகில் இருந்த நில பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாக தெரியவந்துள்ளது. அப்போது, தனது மனைவியுடன் ஏன் தொடர்பில் இருக்கிறாய் என இளையராஜா, வெங்கடேசனிடம் கேட்டதாகவும், இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், வெங்கடேசன் இளையராஜாவை தாக்கிய நிலையில் மயங்கி விழுந்திருக்கிறார்.

இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த இளையராஜாவை வெங்கடேசன் தனது காரில் ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான அகரம் கிராமத்திற்கு சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் தனது நண்பர் செல்வத்தை அழைத்துக்கொண்டு, கீழகல்பூண்டியில் இருந்த இளையராஜாவின் இருசக்கர வாகனத்தை எடுத்துவரச் செய்துள்ளார். தொடர்ந்து இளையராஜாவை அவரது சொந்த ஊரான ஒரங்கூர் அருகே கொண்டு சென்ற வெங்கடேசன், அங்கிருந்த கிணற்றில் அவரது உடலை வீசியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகம் ஏற்படாத வகையில் இளையராஜாவின் இருசக்கர வாகனத்தையும் கிணற்றின் அருகே நிறுத்திவிட்டு இருவரும் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. இளையராஜா மயங்கி விழுந்தது முதல் அவரை கிணற்றில் வீசும் வரை வெங்கடேசன் அனைத்தையும் அஸ்வினிதாவிற்கு தகவல் தெரிவித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் வெங்கடேசன், அவரது நண்பர் செல்வம் மற்றும் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் இளையராஜாவின் மனைவி அஸ்வினிதா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கிணற்றில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், செல்போன் தொடர்புகள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் கள்ளத்தொடர்பு வெளிச்சத்துக்கு வந்து, கொலை வழக்காக மாறிய சம்பவம் வேப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்