விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மழையம்பட்டு ஊராட்சி தக்கா கிராமத்தில் வசித்து வருபவர் வீரப்பன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் ஒரு மகள் மற்றும் 17 வயதில் விக்னேஷ் என்ற மகனும் உள்ளார். விக்னேஷ் திருவெண்ணெய்நல்லூர் அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் குடும்பத்திற்கும், வீரப்பன் குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
வீரப்பன் மாடு வளர்த்து வரும் நிலையில் தினந்தோறும் மாலை பள்ளிக்கு முடிந்து வரும் விக்னேஷ் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அதே போல நேற்று மாலை பள்ளி முடித்து வீடு திரும்பிய விக்னேஷ் தனது வளர்ப்பு பசு மாட்டினை தனது வீட்டிற்கு அருகில் உள்ள நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி உள்ளார். அதனை பார்த்த சுப்பிரமணி ‘எனது நிலத்திற்கு அருகில் எப்படி உன் மாட்டை கட்டுவ’ என ஆபாச வார்த்தையில் திட்டியுள்ளார். இதனால் இரண்டு குடும்பங்களுக்கும் இடையே வழக்கம் போல தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்ட நிலையில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி அவரது மனைவி பூபதி மற்றும் மகன் அஜய் மூவரும் சேர்ந்து விக்னேஷ் அவரது தந்தை வீரப்பன், தாய் மலர் ஆகிய மூவரையும் கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து மயங்கி விழுந்த விக்னேஷை மீட்டு ஆம்புலன்சில் மூலம் விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் விக்னேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற போலீசார் விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து சுப்ரமணியை கைது செய்த நிலையில் அவரது மனைவி பூபதி மற்றும் மகன் அஜய் இருவரையும் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். குடும்ப தகராறில் 12 ஆம் வகுப்பு மாணவன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.